Published : 24 Jun 2025 07:27 AM
Last Updated : 24 Jun 2025 07:27 AM
தேர்வு என்கிற பெயரில் நீங்கள் குழந்தைகளின் அறிவை பரிசோதிக்கிறீர்களா அல்லது அவர்களால் எழுத முடியுமா என பரிசோதிக்கிறீர்களா.. எழுதும் திறன் வேறு, அறிந்திருக்கும் அறிவு வேறு என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்? - மார்கரேட் ரூக்.
நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு எது எனக் கேட்டால் ‘யானை’ எனக் குழந்தைகள் எளிதில் பதில் சொல்லிவிடுவார்கள். அதையே எழுதிக் காட்ட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய சிக்கல். அதிலும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ‘எலிஃபண்ட்’ (Elephant) என்பதற்கான எழுத்துக் கூட்டு தெரிய வேண்டுமென தேர்வுமுறை குழந்தையின் நிலைமையைச் சிக்கலாக்குகிறது. மேலும், அழகான கையெழுத்தில் எழுத வேண்டும். அடித்தல், திருத்தல் இருந்தால் மதிப்பெண் குறைக்கப்படும் என அடுத்தடுத்து சிக்கல்கள் பெருகுகின்றன.
கடிவாளமிடப்பட்ட சிறார்: இந்த வட்டத்துக்குள் அடங்காத குழந்தைகள் கல்வியில் பின்தங்கியோர் என அவமதிக்கப்படும் கொடூர அவலம் இன்றும் தொடர்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர், கல்வியாளர் மார்கரேட் ரூக் எழுதிய ‘மீட் த டிஸ்லெக்ஸியா கிளப்’ (Meet the Dyslexia Club) நூலை வாசித்தபோது குழந்தைகள் குறித்த எனது எண்ணம் முற்றிலும் மாறிப்போனது.
‘டிஸ்லெக்சியா’ என்னும் வாசிப்புக் கடிவாளம் போடப்பட்ட 100 குழந்தைகளின் தனிப்பட்ட அனுபவங்களை இந்நூல் பேசுகிறது. எழுத்தாளரும் ஆசிரியருமான ரோல்சின் லோவே தானொரு டிஸ்லெக்ஸியா மாணவியாக பட்ட துயரங்களை நூலுக்கான முன்னுரையில் அடுக்கிச் செல்லும்போது மனம் கனக்கிறது.
ஆசிரியர்கள் புரிந்து கொள்வதே இல்லை. தங்கள் பணியைக் கடினமாக்குவதாக இதுபோன்ற குழந்தைகளைக் கண்டாலே அவர்கள் அளவற்ற ஆத்திரம் அடைகிறார்கள். டிஸ்லெக்ஸியா நோயல்ல, மூளை சார்ந்த வித்தியாசமான நரம்பியல் நிலை. இதனால், எழுத்துக்கூட்டி வாசிப்பது, எழுதுவது, சிலநேரம் தொடர்ச்சியாகப் பேசுவது கடினமாகப் போகலாம்.
இந்நிலையில் இருக்கும் குழந்தைகளுடைய மூளை வேறு மாதிரி செயல்படுகிறது என்பதை உலகம் தாமதமாகவே கண்டுபிடித்தது. தமிழ் போன்ற உயர்திறன் ஒலி, எழுத்துகளுடன் தொடர்புடைய மொழிகளைக் கற்பவர்கள் மத்தியிலும் டிஸ்லெக்ஸியா அதிகம் காணப்படும் என்பதை நூல் உணர்த்துகிறது.
படைப்பாற்றல் மிக்கவர்கள்: ஐந்து வயதில் பள்ளியில் மந்தமாகவும் சோம்பேறியாகவும் அறியப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாசிப்பு, எழுத்து இரண்டிலும் பின்தங்கினார். ‘தோல்வி’ என்கிற கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். பின்னாளில், அவரது அற்புத சிந்தனைகள் அறிவியல் உலகையே மாற்றின.
இங்கிலாந்தின் இளவரசி பீட்ரிஸ் இதுபோன்ற நிலையில் இருக்கவே ராஜ குடும்பம் அவமானத்தோடுதான் தன்னை வளர்த்தது என்று உரையாற்றி 2018இல் உலகைக் கலங்க வைத்தார். ‘என்னுடைய பிறப்பை அவர்கள் சந்தேகிக்கிறார்கள்’ என்று பகிரங்கமாக அழுதபடியே குற்றம் சாட்டினார். லியோனார்டோ டாவின்சி, அகதா கிறிஸ்டி, ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ரிச்சர்ட் பிரைசன் என இதுபோன்ற கதைகள் இந்நூல் முழுவதும் இருக்கின்றன.
டிஸ்லெக்ஸியா நபர்களின் மூளை பொதுவாக வலது பகுதி சார்ந்தது. இது அவர்களுடைய மாறுபட்ட அணுகுமுறைக்குக் காரணமாகிறது. வழக்கமான வகுப்பறை கற்பிக்கும் முறை இவர்களுக்குப் பொருந்தாது. எழுத்துக்கள் திருப்பி இருப்பதுபோல் தோன்றும். மொழியைப் புரிந்து கொள்வதில் மூளை செயல்பாட்டில் உள்ள சிக்கல் இது. உலக மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவருக்கு இந்தச் சிக்கல் இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில டிஸ்லெக்ஸியா மாணவர்கள் சிந்தனை, கற்பனை, படைப்பாற்றல், கதை சொல்லல் போன்றவற்றில் தலைசிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் புத்தகம் சிறந்த சான்று.
ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனுக்கும் தக்கவாறு தமது கற்பிக்கும் திறனை மாற்றிக்கொள்ளும் ஆசிரியர்கள் அவசியம் என்பதையும், இத்தகைய குழந்தைகளுக்கு ஏற்றார்போல் ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி தர வேண்டும் என்பதையும் இந்நூல் விரிவாக அலசுகிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT