Published : 17 Jun 2025 07:27 AM
Last Updated : 17 Jun 2025 07:27 AM

தேவை முன்னோக்கிய கல்வி | வகுப்பறை புதிது 24

யார் கல்வி கற்க வேண்டும் என்பதோடு எதைக் கல்வியாகக் கற்க வேண்டும் என்பதையும் பற்றியதே இன்று கல்விக்கான யுத்தம் - ஜெனிஃபர் சி. பெர்க் ஷயர்

இந்தியக் கல்விச் சூழலில் சமீபத்திய பரபரப்பு, மத்திய பாடத்திட்ட பாடநூல்களில் 9ஆம், 10ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து டார்வினின் பரிணாம கொள்கை முற்றிலும் நீக்கப்பட்ட சம்பவமாகும். இதுபோக, ‘தசாவதாரம்’ அறிவியல்போல போதிக்கப்படுகிறது, வேதியியல் அட்டவணையை எடுத்துவிட்டு வேதகால புராதன ரசவாதம் சேர்க்கப்பட்டுள்ளது. இது இங்கு மட்டும் நடைபெறும் விஷயமல்ல.

21 ஆம் நூற்றாண்டில் கல்வி மீது பண்பாட்டுப் படையெடுப்புகள் உலகெங்கும் தீவிரமடைந்துள்ளதாக, ‘கல்வி யுத்தங்கள்’ (The Education Wars) நூல் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கப் பேராசிரியர் ஜாக் ஷைனர் மற்றும் பத்திரிகையாளர் ஜெனிஃபர் சி பெர்க் ஷயர் இணைந்து எழுதியுள்ள நூல் இது.

ஐ.நா.வை மீறும் கல்வி: நான்கு முக்கிய தரவுகளை ஐ.நா. சபை 21ஆம் நூற்றாண்டு கல்வி என முன்வைக்கிறது. அவை, வாழ்வதற்காகக் கற்றல், செயல்பட கற்றல், உயிர்த்து இருக்கக் கற்றல் மற்றும் இணைந்து வாழ கற்றல் என்பதாகும். இதுதவிர அறிவியல், தொழில்நுட்ப கல்வியில் கற்றல், ஏற்கெனவே கற்றதை மறத்தல், புதிதாகக் கற்றல் (Learning, Unlearning & Relearning) ஆகியவற்றை ஐ.நா. முன்னிலைப்படுத்துகிறது. உலகெங்கிலும் நடைபெற்று வரும் கல்வி மீதான பண்பாட்டுத் திணிப்புகள் அனைத்தும் ஐ.நா. சபையின் இந்தத் தீர்மானத்துக்கு எதிரானவை என்கிற வாதத்துடன் இந்நூல் தொடங்குகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் உள்பட தாலிபான் குழுக்கள் அறிமுகம் செய்திருக்கும் ‘ஜிகாதி’ கல்விக்கொள்கை குறித்த அத்தியாயம் பொது கல்விமுறை மீது தொடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரோத யுத்தம் என இதை வர்ணிக்கிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெள்ளை இனவாதக் கல்வி, ஜப்பானில் பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் நாஞ்சிங் படுகொலைகள் உள்பட இனவாத அரசியல் திணிப்பு, தென்கொரியாவில் ஆட்சியாளர்களைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டு முக்கிய அறிவியல், அடிப்படை திறன்கள்

குறித்த பாடங்கள் ஒழிக்கப்பட்டது, துருக்கியிலும் பாகிஸ்தானிலும் பெண் கல்விக்கு எதிரான மதவெறி நிலைப்பாடுகள், நோபல் அறிஞர்கள் குறித்த பாடங்களையெல்லாம் நீக்கிவிட்டு ஹங்கேரி நாட்டில் புகுத்தப்படும் பழமைவாத கல்விமுறை, இத்தாலியில் உயர்நிலைப் பள்ளிவரை அறிவியலே தேவையில்லை என்கிற வாதம் என இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் சிக்கல்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

எதிர்காலத்துக்கான கல்வி: குழந்தைகளுக்கான கல்வி அவர்களது எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க உதவக் கூடியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இந்நூல். இறந்த காலத்தை நோக்கி நம்மைக் கல்வி அழைத்துச் செல்வது நவீன யுகத்துக்கு எதிரானது. இப்படிப்பட்ட கல்வி குழந்தைகளின் எதிர்கால நலன்களை முற்றிலும் புறக்கணிக்கும் திட்டமாகும்.

நடுநிலைப்பள்ளி படிப்பைத் தாண்டியதும் ஒரு குழந்தை தனக்கான இலக்குகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் என்ன வகை பணியிடங்கள், அதற்கு உரிய உயர்கல்வி நிலையங்களும் பட்டங்களும் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்து 9ஆம் வகுப்பிலேயே பாடமாக வைக்க வேண்டும் என்கிறது இந்தப் புத்தகம்.

அறிவியல், தொழில்நுட்பம் முதல் சூழலியல்வரை அனைத்தையும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் முன்னோக்கி எடுத்துச் செல்லும் கல்வியே இன்றைய தேவை. மனிதநேயம், அனைவரும் இணைந்து வாழ்தல், புவி பாதுகாப்பு, தனிமனித ஒழுக்கம், பாலியல் சமத்துவம் உள்ளிட்ட அற்புத எதிர்காலம் நோக்கிப் பயணிக்கும் ஒன்றாகக் கல்வி இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டோ.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x