Published : 08 Apr 2025 06:41 AM
Last Updated : 08 Apr 2025 06:41 AM
இன்று பள்ளி ஆசிரியர் என்று ஒருவர் இல்லை அல்லது அப்படி அழைக்கப்படும் ஒருவர் ஆசிரியர் எனும் பெயரில் பலவித அவதாரங்கள் எடுக்க வேண்டியவராக இருக்கிறார். - கிளாரிசா ஃபார்
அந்தக் காலத்து ஆசிரியர்களைப் போல இந்தக் காலத்து ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டோடு இல்லை, அவர்களிடம் ஆளுமைப் பண்பு இல்லை என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது. அப்துல் கலாமின் வாழ்க்கையில் ஒரு சிவசுப்பிரமணியன். அந்த ஆசிரியரைப் பற்றி கலாம் எப்போதும் பெருமையோடு பேசுவார்.
கணிதம் மீது தனக்கு காதல் வரவழைத்து தன்னை மாற்றியவர் ஆசிரியர் மேக்ஸ் டால்மேட் என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இப்படி பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த ஆசிரியர் இருந்தார் என்று பேசுகிறோம். ஆனால், இன்றைய ஆசிரியர்கள் அது மாதிரி இல்லை என்று சொல்லாதவர்கள் இல்லை.
இதை முழுமையாக மறுக்கிறார் கல்வியாளர் கிளாரிசா ஃபார். இங்கிலாந்தைச் சேர்ந்த இவரது, “நாம் உருவாகும் முறை: பள்ளிக் கல்வி ஏன் அவசியம்?” என்கிற புத்தகம் பரவலாக வாசிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் ஏறக்குறைய மாதம் ஒரு அவதாரம் எடுத்தாக வேண்டிய சூழலில் இன்று இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பள்ளிக்கூடம் தேவையில்லை, ஆன்லைன் வழியில் படித்துக் கொள்ளலாம் என்பது அபத்தம் என்கிறார். ஆசிரியர்கள் இல்லாமல் இன்றைய பெற்றோர்களால் குழந்தைகளை ஒருநாள் கூட பார்த்துக்கொள்ள முடியாது.
பம்பரமாய் சுழலும் ஆசிரியர்: கண்டிப்பாகப் பள்ளிக்கூடங்கள் தேவை. பள்ளிக்கூடம் திறக்கின்ற ஜூன் மாதத்தில் ஓர் ஆசிரியர் கால மேலாண்மையாளராக செயல்படுகிறார் என்று இந்த நூல் தொடங்குகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தை காலமுறைப்படி விடுமுறையைக் கழித்து இருக்காது. எப்போது வேண்டுமானாலும் கழிவறைக்குப் போயிருப்பார், எந்த நேரம் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் சாப்பிட்டு இருப்பார், படுத்துக் கொண்டும் உட்கார்ந்து கொண்டும், ஓடிக்கொண்டும் எப்படி வேண்டுமானாலும் இருந்திருப்பார். அவரை பள்ளிக்கூட கால அடிப்படைக்குப் பழக்க வேண்டும்.
இங்கே மணி ஒலிக்கும். அந்தநேரத்தில் இவற்றைச் செய்யலாம், இவற்றைச் செய்யக் கூடாது என்கின்ற கால மேலாண்மை வித்தகராக இந்த முதல் மாதத்தில் ஆசிரியர் அவதாரம் எடுக்கிறார். புதிய வகுப்பறையில் ஜூலை மாதத்தில் நட்புறவு நிபுணராக இருக்கும் ஆசிரியர் ஆகஸ்ட் மாதம் பலவகையான தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்துகின்ற திறன் பயிற்றுநராகச் செயல்படுகிறார்.
செப்டெம்பர் மாதத்தில் எழுத்தறிவு வித்தகராகவும், மழைக்காலமான அக்டோபரில் சுகாதார நோய்த் தடுப்பு ஆலோசகராகவும் ஆசிரியர் பணியாற்ற வேண்டியிருக்கிறது. இந்த மாதங்களில் குழந்தைகளுக்குத் தார்மிகமான முறையில் அரசிடமிருந்து வரவேண்டிய எல்லா நலத் திட்டங்களையும் பெற்றுத் தருகின்ற ஒரு சமூகப் போராளி என்கிற இன்னோர் அவதாரமும் தேவைப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் குழந்தைகள் தினம் உள்பட நிகழ்ச்சி அமைப்பாளராகவும், டிசம்பர் மாதத்தில் படைப்பாக்க வல்லுநராகவும் ஆசிரியர் பம்பரமாகச் சுழன்று பல அவதாரங்கள் எடுக்கிறார். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான பாதுகாவலர், குழந்தை உரிமைப் போராளி, பாலியல் கொடுமைகளைக் கண்காணித்து அதற்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய பணி என்று மேலும் பல அவதாரங்கள் தொடர்கின்றன. சரி, பள்ளிதான் முடிந்து விட்டதே என்று மே மாதத்தில் அந்த ஆசிரியர் பணியாற்றாமல் இருப்பதில்லை என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
மே வந்தாலும் ஓய்வில்லை: உலகெங்கிலும் கல்வியில் இடைவெளி வந்து விடக் கூடாது என்பதற்காக இடைநிற்றல் கண்காணிப்பாளர் என்கிற ஒரு அவதாரத்தை மே மாதம் இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிரியர் எடுக்க வேண்டி இருக்கிறது. அதுமட்டுமல்ல புதிய கல்வியாண்டில் தொடங்கவிருக்கும் தன்னுடைய அவதாரங்களுக்காகப் பயிற்சி பெற வேண்டிய மாதமாகவும் மே மாதம் இருக்கிறது என்று இந்தப் புத்தகம் நிறைவடைகிறது.
கூடுதலாக நமது கல்வி முறையில் பின்பற்றப் படும் எமிஸ் பணி, ஆன்லைன் வருகைப் பதிவு பணிகளையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றுக்கு மத்தியில் பாடப் பொருளையும் நடத்தி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளையும் திறம்பட மேற்கொண்டு, குழந்தைகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுகின்ற ஒருவரைக் கடந்த கால ஆசிரியர்களோடு ஒப்பிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT