Published : 11 Mar 2025 06:19 AM
Last Updated : 11 Mar 2025 06:19 AM
சமூகத்தில் வாழ அச்சமற்ற குழந்தைகளை உருவாக்கத்தான் பள்ளிகள். ஆனால், நாம் பள்ளிக்கூடம் வருவதற்கு அச்சப்படுகின்ற குழந்தைகளை உருவாக்கி விட்டோம் - ஜே. கிருஷ்ண மூர்த்தி பள்ளி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல. பள்ளி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், லேசாக ரெண்டு தூறல் விழுந்தாலே எப்போது பள்ளிக்கு விடுமுறை விடப்படும் என்கிற எதிர்பார்ப்பு குழந்தைகளின் உடனடி எதிர்வினையாக இருக்கிறது. அச்சோ விடுமுறை விட்டு விட்டார்களே என்று வருத்தப்படும் குழந்தைகள் நம் சமூகத்தில் இருக்கிறார்களா என்ன?!
அச்சமற்ற பள்ளி: குழந்தைகள் விரும்பும் பள்ளியை உருவாக்குவதில் மிகப்பெரிய சவால் அடங்கியிருக்கிறது. அதைவிடக் கொடுமை பள்ளிக்குப் போவதற்குக் குழந்தைகள் அச்சப்படுவது. உலகெங்கிலும் உள்ள இன்னொரு துயர யதார்த்தம் முதல் முதலில் பள்ளிக்கூட வாயிலுக்குக் கொண்டு போய் விடப்படும்போது கதறி அழுகின்ற குழந்தைகள் தங்களுடைய ஓலங்களை மெல்ல மெல்ல மறைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், உள்ளுக்குள் அந்தக் குமுறல் இருந்து கொண்டே இருக்கிறது என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அவர் எழுதிய “அச்சமற்ற பள்ளி” நூலில் பள்ளிக் கல்வியின் அடிப்படை பிரச்சினைகளை அலசுகிறார். ஜே.கே என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் அறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கல்வி குறித்த உரையாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. நம் பள்ளிக் கல்வியில் இருக்கும் அடிப்படை சிக்கலை கச்சிதமாக அவர் கண்டுபிடிக்கிறார். நம் பள்ளிகள், அவற்றின் செயல்முறைகள், அன்றாட நடைமுறையாவுமே நாடகத் தன்மையோடு இருக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார்.
சீருடையைச் சரியாக அணிந்து வர வேண்டும். எப்போதும் அதைச் சரியாகப் பேண வேண்டும். இப்படித்தான் உட்கார வேண்டும். இப்படித்தான் நிற்க வேண்டும். அனுமதி பெற்றுதான் நடக்க வேண்டும். அனுமதியோடுதான் எதையுமே செய்ய வேண்டும் என்பன போன்ற நாடகம் ஒவ்வொரு வகுப்பறையினுடைய கற்றல் சூழலையும் கொன்றுவிடுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு.
கற்றல் கற்பித்தல் என்பது பாசாங்கின்றி இயற்கையாக நடைபெற வேண்டிய ஆத்மார்த்தமான செயல்பாடு. இந்தச் செயல்பாட்டில் வகுப்பறை விதிகள் எனும் தேவையற்ற நாடகத்தின் மூலம் அச்சமூட்டுகிற இடமாகப் பள்ளி மாற்றப்படுகிறது. இவற்றையெல்லாம் மீறி பள்ளிக்கூடத்தைக் குழந்தைகள் கொஞ்சமேனும் நேசிக்கிறார்கள் என்றால் தங்கள் நட்பு உறவுகளைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதனால் மட்டுமே என்கிறார் ஜே.கே.
மாணவர் மனசு: நிற்க! இப்போது சமகாலத்துக்கு வருவோம். பள்ளிக்கூடங்களில் குழந்தைக்கு நேருகின்ற இதர ஆபத்துகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள 1098 என்கிற எண்ணுக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டால் போதும் என்று சொல்லி விடுகிறீர்கள். ஆனால், குழந்தைகள் பள்ளிக்கு அலைபேசி எடுத்துவரக்கூடாது என்றும் தடைவிதித்துவிடுகிறீர்களே என்று சமீபத்தில் ஓர் இலக்கிய நிகழ்வில் மாணவர் ஒருவர் என்னைக் கேட்டார். இது உண்மைதான்.
யாரிடமாவது அலைபேசியை வாங்கித்தான் குழந்தைகள் உதவி கோர வேண்டும் என்று வருகிறபோது பெரியவர்களோ ஏன், எதற்கு என்று 1000 கேள்விகளால் அவர்களைத் துளைக்கிறார்கள். இதனால் தங்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைகளைப் பெரும்பாலான குழந்தைகள் வெளியில் சொல்வதே இல்லை.
“மாணவர் மனசு” என்கிற தபால் பெட்டி ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவப்பட்டு அதில் எழுதி போட்டு விடலாம் என்கிற சூழல் மூலம் தற்போது ஓரளவேனும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. பாலியல் கொடுமைகள் தொடங்கி பாகுபாடுவரை பள்ளிக்கூடத்தை அச்சமூட்டும் இடமாக குழந்தைகளுக்கு மாற்றிவிடுகின்றன.
அறிஞர் ஜே.கே சொல்வதுபோல் ஆசிரியர் ஒவ்வொருவரும் குழந்தைகள் நலப் போராளியாகவும், கற்றலில் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கின்ற கிரியா ஊக்கியாகவும் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாகச டிஸ்னி லாண்ட் போலப் பள்ளியைக் கருதி அச்சமின்றி உற்சாகத்தோடு குழந்தைகள் பள்ளிக்கு வருவார்கள்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT