Published : 28 Jan 2025 06:06 AM
Last Updated : 28 Jan 2025 06:06 AM
ஏதாவது ஒன்று வேண்டும் என்று நீங்கள் பிடிவாதமாக முயற்சி செய்தால், இந்தப்பிரபஞ்சம் முழுவதும் எப்படியோ சதி செய்து அதை உங்களுக்கு வரவழைக்கிறது - பாவ்லோ கோய்லோ, ‘ரசவாதி’ நாவல்.
தங்கள் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெரும் கவலை கொள்வதைப் பார்க்க முடிகிறது.
மாணவர்கள் குறைவாக இருக்கும் பள்ளிகளைக் காலிசெய்து வேறு பள்ளிகளோடு இணைத்து விடவேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகிறது தேசிய கல்விக் கொள்கை. இதனை எதிர்த்து கல்விச் செயற்பாட்டாளர்கள் அரசு பள்ளிகளைக் காப்பாற்றுவதற்குக் களம் இறங்குகிறார்கள்.
‘கவுண்ட் டவுன்’ ஆரம்பம்: வகுப்பறை என்பது எத்தனை மாணவர்களால் ஆனதாக இருக்க வேண்டும்? சமீபத்தில், ‘டீச்சிங் தட் மேட்டர்ஸ்’ புத்தகம் வெளிவந்துள்ளது. ‘கற்பித்தல் அதுவே தேவை’ என்கிற அர்த்தத்தில் ஃப்ராங்க் தாம்ஸ் எழுதிய இந்நூல் வித்தியாசமான முறையில் இந்தப் பிரச்சினையை அணுகுகிறது.
முதலில் ஆறு மாணவர்கள் கொண்ட வகுப்பறையோடு இந்த நூலின் ‘கவுண்ட் டவுன்’ தொடங்குகிறது. சாமோஸ் எனும் கிரேக்க நகரில் அறிஞர் பித்தாகரஸ் அரை வட்டம் (semicircle) என்று அழைக்கப்பட்ட தனது முதல் பள்ளியை பொ.ஆ.மு. 527-ல் தொடங்கினார். அந்தப் பள்ளியில் மொத்தம் 06 மாணவர்கள். அவர்களில் ஐவர் மாணவர்கள், ஒருவர் மாணவி. என்ன ஓர் அற்புதம்!
பிறகு ஐந்தே மாணவர்களைக் கொண்ட வகுப்பறையைத் தேடி 1870 ஆண்டிற்கு பயணிக்க வேண்டும். இடம் இத்தாலி. காஸா டை பாம்பினி (‘குழந்தைகளின் இல்லம்’) எனும் பள்ளியை சான் லோரென்ஸோ நகரில் உருவாக்கியபோது அறிஞர் மரியா மாண்டிசோரி மாணவர்களாகப் பெற்றது ஐந்து பேரை. நான்கே மாணவர்களின் வகுப்பறையைத் தேடி நாம் பிரான்ஸுக்குச் செல்கிறோம்.
வறுமை, எளிமை மற்றும் தூய்மை எனும் தாரக மந்திரத்தோடு தங்கள் கழுத்தில் பழுப்பு அங்கி அணிந்தபடி தொடங்கப்பட்ட சகோதரத்துவ கிறிஸ்தவ அடிப்படையிலான பியோதர் பிரான்சிஸ் அஸ்சிசி என்பவரின் மாற்று வகுப்பறை. 1209-ல் தொடங்கப்பட்ட இந்தச் சகோதரத்துவ கல்வி முறையைப் பிற்காலத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சுவிகரித்துக் கொண்டது.
இன்று கான் அகாடமி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 2004-ல் ஆசிரியர் சல்மான் கான் தன்னுடைய மூன்று ஒன்றுவிட்ட சகோதரர்களுக்குத் தொடங்கிய ஆன்லைன் வகுப்பு இது. முதலில் யாஹூவை பயன்படுத்தி பிறகு யூடியூப் வழியாகத் தலைசிறந்த வகுப்பறையாக உருவெடுத்தது அந்த முயற்சி. ஒப்பற்ற ஆசான்கள் நோபல் அறிஞர் சுப்ரமணியன் சந்திரசேகர் 1940களில் ஏற்கஸ் எனும் வானியல் மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
கூடவே அவர் பல்கலைக் கழக பேராசிரியர் ஆகவும் இருந்தார். அங்கிருந்து சிகாகோ பல்கலைக்கழகம் 240 கி.மீ. தொலைவில் இருந்தது. வாராவாரம் அங்கு சென்று இரண்டே மாணவர்களுக்கு அவர் வகுப்பெடுத்தார். அந்த இரண்டு மாணவர்கள் சென் நிங் யாங் மற்றும் சங் டாவோ லி ஆவர். இவர்கள் இருவருமே 1957-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றனர்.
ஒரே ஒரு மாணவரைக் கொண்ட வகுப்பறையா அது, என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? 1880-ல் அந்த வகுப்பறையில் இருந்த மாணவியின் பெயர் ஹெலன் கெல்லர். பார்வை இல்லை, வாய்பேச முடியாது மற்றும் காது கேளாததால் இத்தகைய ஒருவருக்கு எப்படி நாம் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும்? அப்படி வந்தவர்தான் ஆசிரியை ஆனி சலிவான்.
எந்த விதத்திலும் கற்றல் குறித்த அடிப்படை இல்லாத இரண்டு மாதங்களைக் கடந்து போராடி எப்படியோ விரல்களின் மூலம் தோள்களில் ஸ்பரிசத்தின் மூலம் சொற்களைப் பதிய வைத்த அற்புத ஆசிரியை. வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தியாகச்சுடர் ஆனி சலிவான். ஓர் ஒப்பற்ற ஆசிரியருக்கு எத்தனை மாணவர்கள் தங்கள் வகுப்பில் இருக்கிறார்கள் என்பது ஒரு கணக்கல்ல. கற்றல் கற்பித்தல் என்பதே பிரதானம் என்பதை என்ன அழகாக இந்தப் புத்தகம் விளக்கி விட்டது. இதை அரசும் நாமும் உணர வேண்டும்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT