ஒருவரின் உடல் உயரத்தைத் தீர்மானிப்பதில் மரபணு, உணவு ஊட்டம் தவிர சமூக காரணிகளும் பங்கு வகிக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாத்தமாலாவின் மாயா பழங்குடியினர் தான் உலகிலேயே மிகவும் குள்ள உடல்வாகு கொண்டவர்கள். ஆண்கள் ஐந்து அடி; பெண்கள் ஐந்து அடிக்கு சில அங்குலம் குறைவு என்பதே அவர்களின் சராசரி உயரமாகும்.
அதுவே அமெரிக்காவில் குடியேறிய குவாத்தமாலாவின் மாயா பழங்குடியினரின் குழந்தைகள், குவாத்தமாலாவிலே பிறக்கும் குழந்தைகளைவிட சராசரியாக நாலு அங்குலம் கூடுதல் உயரம் பெறுகிறார்கள். இதேபோலத்தான் வளர்ந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த சமூகத்தினரை அவர்களது தாய்நாட்டுடன் ஒப்பிடும்போது உயரம் அதிகரிப்பதை வல்லுநர்கள் நீண்ட காலமாகக் கவனித்து வருகின்றனர். மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் காரணமாக கூடுதல் உடல் உயரம் ஏற்படுகிறது என்பதே வழக்கமான புரிதல்.
கீரிப்பூனைத் தலைவன்: ஆனால், இங்கிலாந்தில் உள்ள லவுபரோ பல்கலையின் உயிரியல் மானுடவியலாளர் பாரி போகின், உணவு மற்றும் மருத்துவ வசதிக்குக் குறையில்லாது வளரும் பணக்கார குவாத்தமாலா மாயா குடியின குழந்தைகள்கூட அமெரிக்காவில் வளரும் ஏழை மாயா குடியின குழந்தைகளைவிட உயரம் குறைவாக உள்ளனர் என்கிறார். எனவே உணவு, சுகாதாரம் மட்டுமல்ல நாம் வளரும் சமூகச் சூழலும் உடல் உயரம் போன்ற உடல் நல வளர்ச்சியைப் பாதிக்கிறது என்கிறார்.
மனிதர்களில் மட்டுமல்ல கடுமையான ஏற்றத்தாழ்வு கொண்ட அனைத்து விதமான உயிரினங்கள் மத்தியிலும் மேலாதிக்க உறுப்பினர்களின் உடல்வாகு சற்றே பெரிதாகவும், கீழ்நிலை உறுப்பினர்களின் உடல் அமைவு சிறியதாகவும் இருக்கும். உதாரணமாக, மீர்கட் (Meerkat) எனும் கலஹரி கீரிப்பூனை இனத்திலும் குழுவில் ஆதிக்கம் செலுத்தும் உறுப்பினரின் உயரம் மற்ற எல்லா கீரிப்பூனைகளை விடவும் உயரமாக இருக்கும். 3 முதல் 50 எண்ணிக்கையில் குழுவாக வாழும் இந்த கீரிப்பூனைகளில் உயரமான ஆண் அல்லது பெண் மடிந்து விட்டால் அடுத்த உயர நிலையில் உள்ள பூனை மேலாதிக்க நிலைக்கு வரும்.
இனப்பெருக்கத்தில் ஈடுபடாத அடங்கிப்போகும் கீழ்நிலை கீரிப்பூனைகளுக்கு செயற்கையாக ஊட்டம் அளித்து சோதனை செய்து பார்த்தனர். இவற்றின் உயரம் பெரிதானது; பெரிதாகியதும் அவை மேலாதிக்க நிலைக்கு வந்தன. பின்னர் கூடுதல் ஊட்டம் அளிக்கப்படாதபோதும் அவற்றின் வளர்ச்சி கூடி மேலும் அதிக உடல்வாகு பெற்றன.
ஆதிக்க நிலையில் உள்ள பெண் கீரிப்பூனையின் உடலில் எஸ்ட்ராடியோல், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய பாலியல் ஹார்மோன்களின் அளவு கீழ்நிலை பெண் பூனைகளை விட கூடுதலாக இருந்தது. கார்டிசோல் எனும் ஹார்மோன் அளவும் ஆதிக்க நிலையில் உள்ள ஆண்- பெண் இருபால் கீரிப்பூனைகளிடத்திலும் கூடுதலாக காணப்பட்டது.
சத்து ஊட்டும் சமத்துவம்: வேறொரு ஆய்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய 5 பணக்கார நாடுகளை சார்ந்த 4 முதல் 6 வயது வரையிலான 37,000 குழந்தைகளின் உயரங்களை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். பொருளாதார சமூக சமத்துவமின்மை மிகக் குறைவாக உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன் நாட்டை சார்ந்த குழந்தைகள், அதே பொருளாதார பின்னணி கொண்ட சமத்துவமின்மை கூடுதலாக உள்ள அமெரிக்காவின் குழந்தைகளைவிடக் கூடுதல் உடல் உயரம் பெற்று இருந்தனர்.
உடல் உயரக் குறைவுக்கும் சமத்துவமின்மைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. சமத்துவமின்மை ஏற்படுத்தும் சமூக அழுத்தங்களின் காரணமாக ஹார்மோன் செயல்பாடு தாக்கம் அடைந்து குழந்தையின் சிறு வயதிலேயே உயர வேறுபாடு தொடங்கும். வளரிளம் பருவம் முதல் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
மரபணுவும், ஊட்டச்சத்து, சுகாதாரமும் சந்தேகத்திற்கு இடமின்றி மனித உயர உடல்வாகுடன் சம்பந்தப்பட்டவை. இவற்றுக்கும் மேலாக சமூக பொருளாதார அரசியல் உணர்வெழுச்சி ஆகிய காரணிகள் உயர ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறார் பாரி போகின். எனவே பஞ்சம், பசி இல்லை என்றாலும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறைமுகமாக சமூகத்தில் பின்தங்கியவர்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது.
குழந்தைகள் வளரிளம் பருவத்தினரின் வளர்ச்சிக் குறைவு என்பது ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான சுட்டி என்பதைவிட சமூக ஏற்றத்தாழ்வைச் சுட்டுகிறது. எனவே ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமூகநீதி வளர்ப்பதும் பொது நலனுக்கு அவசியம்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; tvv123@gmail.com
WRITE A COMMENT