வியாழன் கோளின் 95 நிலவுகளில் ஒன்றான யூரோபாவை ஆய்வு செய்ய ‘யூரோபா கிளிப்பர்’ எனும் நாசா விண்கலம் இந்திய நேரப்படி கடந்த அக். 14, இரவு 10:06 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஐந்து ஆண்டுகள் பயணம் செய்து 2030 ஏப்ரல் 11 அன்று வியாழனை அடையும்.
வியாழனின் நான்காவது பெரிய துணைக்கோள் அல்லது நிலவு யூரோபா. பூமியின் நிலவை விட சற்று சிறியது. இதன் மேற்பரப்பில் நீரும் அதன் மீது உறைபனியும் உள்ளது. அடர்த்தி குறைவான ஆனால் ஆக்ஸிஜன் செறிவான மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. 1990களில் ஏவப்பட்ட நாசாவின் கலிலியோ விண்கலம் நடத்திய ஆராய்ச்சியின்படி யூரோபாவில் உள்ள நீரின் அளவு பூமியில் உள்ள எல்லா நீரையும் விட கூடுதல் என கண்டறியப்பட்டது.
இந்த நீர் நிலை உப்பு நிறைந்த கடல் எனவும் அங்கே கரிம சேர்மங்கள் செறிவாக உள்ளன எனவும் தரவுகள் சுட்டுகின்றன. யூரோபாவின் கடலில் ஆற்றல் மூலங்களும் இருப்பதால் அங்கே நுண்ணுயிரிகள் பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. இந்நிலையில், யூரோபாவில் உயிர்த் தோன்றி வளர வாய்ப்பு உள்ளதா என ஆராய்வதே ‘யூரோபா கிளிப்பர்’ திட்டத்தின் குறிக்கோள்.
நீண்ட பயணம்: இன்றுள்ள நிலை நோக்கி விண்கலத்தை அனுப்பினால் ஐந்து வருடங்கள் கழித்து அதே புள்ளியில் வியாழன் கோள் இருக்காது. ஆகவே வியாழன் கோளின் நகர்வை துல்லியமாகக் கணித்து அந்தப் புள்ளியை நோக்கி விண்கலத்தை ஏவ வேண்டும்.
பூமியும் வியாழனும் சூரியனைச் சுற்றி வரும்போது ஒரே திசையில் அமைந்த நெருங்கிய நிலையில் தொலைவு 58.8 கோடி கி.மீ. அதுவே எதிர் எதிரே அமையும்போது தொலைவு 96.8 கோடி கி.மீ. சராசரி தொலைவு 71.4 கோடி கிமீ. ஆனால் வியப்பாக இந்த விண்கலம் ஐந்து வருடங்களில் சராசரி தொலைவைப் போல நான்கு மடங்கு (290 கோடி கி.மீ.) பயணம் செய்துதான் வியாழன் கோளை அடையும்.
ஏனெனில் முதலில் இந்த விண்கலம் பிப்ரவரி 2025-ல் செவ்வாய் கோளின் அருகே 500-1000 கி.மீ. தொலைவில் பறந்து செல்லும். அங்கிருந்து திரும்பவும் டிசம்பர் 2026-ல் பூமி அருகே வரும். கடைசியில் வியாழன் கோளைச் சந்திக்க வேண்டிய புள்ளி நோக்கி செல்லும்.
எதற்காகத் தலையைச் சுற்றி மூக்கை தொட வேண்டும் என்கிற சந்தேகமா? அதிகபட்ச உயரத்தில் உள்ளபோது ஆடும் ஊஞ்சலை தட்டிவிட்டால் அதன் இயக்க ஆற்றல் மிகும்.அதுபோல செவ்வாய் கோளைச் சுற்றிவரும்போது என்ஜினை இயக்கி சற்றே உந்தம் தந்தால் விண்கலத்தின் உந்தம் கூடும்.
இதனை ஈர்ப்பு விசை உதவி (gravity assist) என்பார்கள். வியாழன் உள்ள தொலைவை அடைய ஆற்றல் மிகு ராக்கெட் இல்லை என்பது மட்டுமல்ல எரிபொருளும் வீணாகும். எனவேதான் முதல்முறை செவ்வாய் கோளின் ஈர்ப்பு விசை உதவி பெற்று அதன் பின்னர் பூமியின் ஈர்ப்பு விசை உதவி பெற்று வியாழன் சந்திப்பு புள்ளி நோக்கி விண்கலம் செல்லும்.
நீள்வட்ட பாதை: யூரோபாவைச் சுற்றிவருமாறு விண்கலப் பாதையை அமைத்தால் ஆற்றல் மிகு கதிர் வீச்சில் அதன் மின்னணு கருவிகள் எரிந்து சாம்பலாகிவிடும். எனவேதான் கோழிமுட்டை போன்ற நீள் வட்டப் பாதையில் செல்லுமாறு அமைத்துள்ளனர். நீள் வட்ட பாதையில் சுழலும்போது அருகே உள்ள பாதையில் வேகமாகவும், தொலைவில் உள்ளபோது மெதுவாகவும் நகரும்.
அவ்வாறு அருகே வரும்போது யூரோபா கோளுக்கு மிகச் சமீபமாகச் செல்லுமாறு பாதை வகுத்துள்ளனர். அந்த சில மணித்துளிகளில் ஆய்வுக்கருவிகள் அந்தக் கோளை குறித்த தரவுகளைச் சேகரிக்கும். அதன் வாழ்நாளில் சுமார் 49 தடவை யூரோபா கோளுக்கு அருகே கடந்து செல்லும்.
யூரோபாவினுடைய கடலின் ஆழம், அதன் மேல் போர்வை போலப் படர்ந்துள்ள உறைபனியின் தடிமன், கோளின் புவியியல், வியாழன் கோள் விசையினால் யூரோபாவில் ஏற்படும் கடல் ஓதம் குறித்த தரவுகள், அங்கு உயிரினங்கள் வளர வாய்ப்புள்ளதா எனப் பல்வேறு முக்கிய ஆய்வுகளை யூரோபா கிளிப்பர் மேற்கொள்ளும்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
WRITE A COMMENT