செயற்கை நுண்ணறிவு கொண்டு முகம், கைரேகை ஆகியவற்றை அடையாளம் காணும் செயலிகளை கைபேசியில் காண்கிறோம். இதுபோல் குரல் அடையாளம் காட்டும் செயலி, புகைப்படங்களிலிருந்து பறவை, மரம், நாற்காலி போன்ற பொருட்களை பிரித்துக்காட்டும் செயலிகளும் உள்ளன. இதன் அடுத்த கட்டமாக சுவையை இனம் காணும் செயற்கை நாக்கை வடிவமைத்துள்ளனர்.
பாலில் கலந்துள்ள நீரின் அளவு, பழச்சாறு கெட்டுப்போனதற்கான அறிகுறி, டிகிரி காபியா, பொடிக் காபியா, லாத்தே காபியா எனச் சுவைத்தே இனம் காணும் திறமை கொண்டது இந்த செயற்கை நாக்கு. உணவு பாதுகாப்பு, மருத்துவ நோயறிதல், உற்பத்தி தர நிர்ணயம் முதலியவற்றுக்கு இந்த செயற்கை நாக்கு பயன்பட வரவிருக்கிறது.
நாக்குக்கு வந்த சோதனை: கார்பன் நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நானோ பொருள் கிராபீன்.
கிராஃபைட்டிலிருந்து பிரித்தெடுக்கப் பட்டுத் தூய கார்பனால் ஆக்கப்பட்ட கிராபீன் பல்வேறு நுண் உணர்வீயாக (sensor) செயல்படும் தன்மைக் கொண்டது. வேதியியல் கலவையில் ஏற்படும் மாற்றங்களை மின் சமிக்ஞைகளாக மாற்றுவதன் மூலம் கிராபீன் செயல்படுகிறது. எளிதில் ஆவியாகக்கூடிய, நீரில் கரையும் தன்மை கொண்ட சில வேதிப்பொருட்கள் நாக்கில் உள்ள சுவை உணர்வீ செல்களோடு உயிரிவேதி வினை புரிவதைத்தான் சுவை என்பதாக நாம் உணர்கிறோம்.
இதை கிராபீன் உணர்வீ கொண்டு அளவிட முடியும். ஆனால், இதில் பல சவால்கள் உள்ளன. ஒருமுறை பயன்படுத்திய கிராபீன் துணுக்கை அடுத்தமுறை பயன்படுத்தும்போது அதில் முதல் தடவையின் கறை படிந்து இருக்கலாம். ஆகவே அடுத்தமுறை அதே விளைவை எதிர்பார்க்க முடியாது.
கை விரல்களைப்போல உணர்வீயும் ஒன்றுக்கொன்று மாறுபடும். அதேபோல கிராபீன் உணர்வீ உருவாக்கும் மின் சமிக்ஞையைக் கையாளும் சிப்களும் வேறுபடும். இவை அனைத்தும் செயற்கை நாக்கை உருவாக்குவதில் தடையாக இருந்தன.
தீர்வு கிடைத்தது: அமெரிக்காவின் பென் மாநில பல்கலை பொறியியல் அறிவியல் மற்றும் இயக்கவியல் துறையின் ஆண்ட்ரூ பன்னோன், ஆதித்ய ராஜ் உள்ளிட்ட 8 ஆய்வாளர்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு வழியே இதற்குத் தீர்வு கண்டனர்.
பல்வேறு சுவைகளை உணரும்படியான உயிரியல் ஏற்பிகள் சுவையறியும் செல்களில் உள்ளன. இவை சேகரிக்கும் தரவுகள் மூளையில் உள்ள காஸ்ட்ரேட்டரி கார்டெக்ஸுக்கு செல்கிறது. அங்கே உயிரியல் நரம்பியல் வலைப்பின்னல் வழியே சுவையறிதல் எனும் தன்னுணர்வு உருவாகிறது. கஸ்டடோரி கார்டெக்ஸ் முதலில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு, காரம் ஆகிய ஐந்து பரந்த வகைகளாகச் சுவையை வகைப்படுத்தியது. காலப்போக்கில் சுவையின் நுணுக்கங்களை அறிய மூளை கற்றுக்கொள்கிறது. அதன் வழியே சுவையின் நுணுக்கத்தைச் சிறப்பாக அறிந்துகொள்ள முடிகிறது.
செயற்கையாக கஸ்டட்டரி கார்டெக்ஸின் செயல்பாட்டைப் பாசாங்கு செய்யும் செயற்கை நுண்ணறிவைப் படைக்க செயற்கை நரம்பியல் வலையமைப்பை உருவாக்கினர். தரவுகளை மதிப்பிடுவதிலும் புரிந்து கொள்வதிலும் மனித மூளையைப் பிரதிபலிக்கும் இயந்திரக் கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தி செயற்கை நரம்பியல் வலையமைப்பைப் பயிற்றுவித்தனர். ஏற்கெனவே கிராபீன் உணர்வீ கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுவை இனம் காணும் ஆய்வுகளைத் தொகுத்து அந்தத் தரவுகளை பயிற்சி தரவுகளாகப் பயன்படுத்தும் இந்த செயலி சுவை அறியும் திறன் பெற்றது.
செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும் செயற்கை நாக்கு கொண்டு உணவின் சுவை மட்டுமல்ல சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வேதிப்பொருள்களைக்கூட இனம் காண முடியும்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
WRITE A COMMENT