முழங்காலுக்குள் மர்ம எலும்பு | புதுமை புகுத்து 37


முழங்காலுக்குள் மர்ம எலும்பு | புதுமை புகுத்து 37

முழங்காலுக்குள் மர்ம எலும்பு த.வி.வெங்கடேஸ்வரன் நான்கு கால்களில் நடந்து வந்த மனித முன்னோர்களை நிமிர்ந்து நின்று இரண்டு காலில் நடக்க செய்தது நமது முழங்காலில் உள்ள எள்ளு அளவே உள்ள லேட்ரல் ஃபேபெல்லா எனும் எலும்பு. ஆனால், 'நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்' என்பது போல இந்த எலும்புதான் மூப்பு அடைந்ததும் ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாதம் என்கிற முதுமை மூட்டழற்சி ஏற்படுத்துகிறது எனக் கண்டுபிடித்துள்ளர்கள்.

இதில் அதிசயம் என்ன வென்றால், முழங்காலுக்குக் கீழே தசைநாரில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்படும் இந்த எலும்பு உலக மக்கள்தொகையில் 39 சதவீதத்தினரிடம் காணப்படுகிறது. மற்றவர்களிடம் இந்த எலும்பு இல்லை. இந்த மர்ம எலும்பு உள்ளவர்கள் முதுமை பருவத்தில் ஆர்த்ரைடிஸ் நோயால் அவதிப்படுவார்கள்.

வால் போன்ற மிச்சம்: கிங்ஸ் காலேஜ் லண்டனை சார்ந்த நெல்லி ஏ. ஃப்ராகோஸோ வர்காஸ், மைக்கேல் ஏ. பெர்தாயூம் ஆகியோர் நடத்திய ஆய்வில் மனிதன், குரங்குகள், வாலில்லா மனிதக் குரங்குகள் அடங்கிய வரிசை சார்ந்த 93 முதனிகளை (Primate) ஆய்வு செய்து பார்த்தனர். கிப்பன் தவிர ஏனைய மனிதக் குரங்குகளில் இந்த எலும்பு இல்லை. ஏனைய முதனி விலங்குகளில் பொதுவாக இரண்டு கால் முட்டிகளிலும் காணப்பட்டாலும் மனிதர்களிடையே பொதுவாக ஒரு காலில் மட்டுமே காணப்படுகிறது.

இந்த எலும்பின் பரிணாம வளர்ச்சியினால் ஆஸ்ட்ராலோபிதேகஸ் போன்ற மனிதர்களின் மூதாய் இனம் நான்கு கால்களில் நடப்பதிலிருந்து இரண்டு கால்களில் நடக்க உதவியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அந்த வகை மனிதர்கள் இன்று இல்லை.

அதன் பின்னர் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் உடலமைப்பு மாற்றம் காரணமாகப் பின்னர் தோன்றிய மனிதன் போன்ற உயிரிகளுக்கு இந்த எலும்பு தேவைப்படவில்லை. வாலின் மிச்ச சொச்சம் நமது முதுகெலும்பில் உள்ளதுபோலதான் இன்று இந்த எலும்பு நம்மிடம் உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலக மக்கள் தொகையில் வெறும் 11% நபர்களிடம் மட்டுமே இந்த எலும்பு காணப்பட்டது. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்பது போல இன்று மூன்று மடங்கு நபர்களிடம், அதாவது சுமார் 39% நபர்களிடம் காணப்படுவது புதிர்தான்.

ஊட்டச்சத்தினால் ஆபத்தா? - கடந்த 100 ஆண்டுகளில், உணவு உற்பத்தி அபரிமிதமாகப் பெருகியுள்ளது. அதிலும் சமூகநீதி கொள்கை பரவலானதால் அனைவருக்கும் உணவு கிடைத்திருக்கிறது. இதனால் முற்காலத்தை விட சிறந்த ஊட்டச்சத்தைப் பெறுபவர்களாக இன்று உள்ளோம். மனித இனத்தின் சராசரி உயரம், எடை கடந்த நூறு ஆண்டுகளில் கூடியுள்ளது.

இந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக ஏதோவகையில் தூண்டுதல் ஏற்பட்டு இந்த எலும்பு கூடுதல் நபர்களிடம் முளைக்கிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த எலும்பின் மறுவருகை பரிணாம படிநிலை வளர்ச்சியின் மருவிய தகவமைப்பாக இருக்கலாம் என்கிறார் பெர்தாயூம். குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட தேவைக்காக உருவாகும் உறுப்பு மருவிய தகவமைப்பு காரணமாக புதிய செயல்பாட்டைப் பெறும்.

கீல்வாதம் உள்ளவர்களிடையே இந்த லேட்ரல் ஃபேபெல்லா எலும்பு இருக்க இரு மடங்கு கூடுதல் சாத்தியம் இருப்பது தெரியவந்துள்ளது. ஃபேபெல்லா எலும்புக்கும் கீல்வாதத்துக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் இடையே உள்ள உறவை மேலும் நுட்பமாக ஆய்வு செய்தால் ஒருவேளை முதுமை மூட்டுவலிக்குத் தீர்வு காணலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

WRITE A COMMENT

x