அண்மையில் நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட மெல்ல முயன்று கொண்டிருக்கிறோம். இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரும் அதேவேளையில் மீண்டும் இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற பதைபதைப்பு எழுகிறதல்லவா!? அதற்கு முதலில் நிலச்சரிவு யாதென புரிந்து கொள்வோம்.
மலை போன்ற சாய்வாக உள்ள நிலப்பகுதியில் உள்ள கற்கள், பாறைகள், மணல் ஆகியவற்றின் கலவை சரிவு நோக்கி கீழ் நகர்வதை நிலச்சரிவு என்கிறோம். ஆண்டுக்கு சில சென்டிமீட்டர் வேகம் முதல் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம்வரை வலுவிழந்த கலவை கீழ்நோக்கி நகரலாம். திடீரென்று வேகமாக நகரும்போது நாம் தப்பி ஓட முடியாமல் போகும்.
செங்குத்தான மலை பகுதியிலிருந்து பாறை, மண், முதலியன 1. கீழே விழுதல், 2. குப்புறக் கவிழ்தல், 3. சாய்வான நிலப்பகுதி நழுவி விழுதல், 4. நதி போல பாறை, கல், மண், கலவை பாய்தல் என நான்கு வகை நிலச்சரிவுகள் உள்ளன. பெரும்பாலான நிலச்சரிவுகள் 20 முதல் 30 டிகிரிவரை சாய்வாக உள்ள நிலப்பகுதியில் ஏற்படுகிறது.
ஏன் ஏற்படுகிறது? - மணல், கற்கள் போன்ற பல்வேறு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நிலப்பரப்பு கெட்டியாக உள்ளது. பெரும் ஆற்றல் செலவழித்துத்தான் நிலத்தை தோண்ட முடிகிறது. அதுவே மலைப்பாங்கான பகுதிகளில் புவி ஈர்ப்பு விசையின் கீழ்நோக்கிய விசைக்கு எதிராக செயல்பட்டு சரிவுகள் நிலைத்தன்மை கொண்டிருக்கும். கெட்டி தட்டிய ‘பசை’யின் வலு குறையும்போது கீழ் நோக்கிய ஈர்ப்பு விசையின் கை ஓங்கி சரிகிறது.
கனமழையில் நிலத்தடியில் கூடுதல் நீர் செறிவு ஏற்படும்போது அதன் எடை கூடும். எனவே கீழ்நோக்கிய விசை இயல்பை விட அதிகரிக்கும். மேலும் நிலத்தடியில் அதிக நீர்பசை மசகு போல செயல்பட்டு கல் பாறை மண் இடையே உள்ள உராய்வு விசையை குறைத்து விடும். எனவே நிலத்தின் கலவையில் உள்ள பொருட்கள் வெகு எளிதாக நகரும்.
தலையைக் கால் தாங்குவது போல, சாய்வான பகுதியின் மேற்பகுதியை தாங்குவது கீழ்ப் பகுதிதான். சாய்வான நிலப்பகுதியின் அடியில் நதி பாய்ந்தால் ஆற்று நீரோட்டம் அடிப்பகுதியை மெல்ல மெல்ல அரிக்கும். எனவே காலப்போக்கில் அடிப்பகுதியின் வலு குறைந்து மேற்பகுதி கீழே விழுந்துவிடும். மலையடிவாரங்களில் போதிய திட்டமின்றி சாலை அமைத்தல், வீடு கட்டுதல் போன்ற மனித குறுக்கீடுகளும் சாய்வு நிலப்பகுதியின் அடிப்புற வலுவை குறைத்து நிலச்சரிவுக்கு வித்திடலாம்.
நிலத்தின் மீது வளரும் புல், புதர், செடி, மரம் போன்ற தாவரங்களின் வேர்கள் மணல், கற்களின் கெட்டித்தன்மைக்கு வலு சேர்க்கும். காட்டுத் தீ, மரம் வெட்டுதல், தாவரங்களை அகற்றுதல் போன்றவற்றால் இந்த பிடிமானம் அகன்று நிலச்சரிவு ஏற்படலாம். இயல்பாகவே மழை, காற்று போன்றவை பாறை, கல், மண் முதலியவற்றைச் சிதைக்கும். இத்தகைய இயற்கைத் தேய்வு காரணமாகவும் நிலச்சரிவு ஏற்படக்கூடும்.
முன்கூட்டியே அறிய முடியுமா? - பட்டகாலிலே படும் என்பது போல ஏற்கெனவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தில் மறுபடி நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு. அதேநேரம் நிலச்சரிவு முன்னறிவிப்பு தொழில்நுட்பம் தொடக்க நிலையில்தான் உள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்டு கடந்தகால தரவுகளைப் பகுப்பாய்வு செய்து முன்னறிவிப்பு அல்காரி தங்களை உருவாக்கி உலகெங்கும் ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை தொலையுணர்வு தொழில்நுட்பம் வழியே இஸ்ரோ, நிலச்சரிவு ஆபாய பகுதிகளை இனம் கண்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ள சாய்வான மக்கள் குடியிருப்பு பகுதியில் மண்ணின் ஈரப்பதம், மழைப்பொழிவு, தரை இயக்கம் முதலியவற்றைக் கண்காணித்து தகவல் தரும் சென்சார்கள் - உணர்வீக்கருவிகள் உள்ளன. இவற்றின் மூலமும் முன்னெச்சரிக்கை ஓரளவு சாத்தியம்.
கடந்த ஜூலை 2024-ல் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் (The Geological Survey of India) தேசிய நிலச்சரிவு முன்னறிவிப்பு மையம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டத்தில் கலிம்போங், டார்ஜிலிங், நீலகிரி ஆகிய பகுதிகளில் முன்னறிவிப்பு வழங்கப்பட்டது. வரும் 2030 க்குள் இந்த மையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகனமழையின்போது மலைப்பாங்கான மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நிலம் கெட்டியாக இல்லாது போனால் பலத்த மழையில் மண், கல், பாறைகள் இளகி பிரிந்து நகரும். இது நிலச்சரிவாக உருவெடுக்கும். எனவே நிலச்சரிவு ஆபத்து உள்ள பகுதிகளின் துல்லிய மழை முன்னறிவிப்பு அவசியம். இதற்கு டாப்ளர் ரேடார் கருவி அத்தியாவசியம். 2013-ல் 15 டாப்ளர் ரேடார்கள் இருந்தன. ஆமை வேகத்தில் வளர்ந்து 2023-ல் 37ஆக அதிகரித்துள்ளது. 2025க்குள் 62 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
WRITE A COMMENT