ஒருவர் தனக்கு சாதகமான சூழலிலும் சாதகமற்ற சூழலிலும் ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தை ஏற்றிசையும் வழிகளை கடந்த வாரங்களில் பூங்கொடி, மகிழ்நன் கதைகளின் வழியே அறிந்துகொண்டோம். இவை ஒருவரின் தனிவாழ்வில் ஏற்படும் மனஅழுத்தத்தை அவரே திட்டமிட்டு, பொறுமையாகவும் விடாமுயற்சியோடும் ஏற்றிசைந்து வெல்லும் வழிகளைப் பேசுகின்றன. ஆனால், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களோடு கலந்து பழகும்போது நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள்வது? என்று வினவினாள் மணிமேகலை.
பள்ளி இறுதியாண்டு படிக்கும் பொன்னிலவன் தன் அம்மாவோடும் எழுந்து நடமாட முடியாத பாட்டியோடும் வாழ்கிறார். அவர் தந்தை வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். இந்நிலையில் பொன்னிலவன் அம்மாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர் கூறிவிட்டார். அங்கு அம்மாவோடு தங்கி அவரைக் கவனித்துக்கொள்ள பொன்னிலவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதேவேளையில் பாட்டியை தனியே வீட்டில் விடமுடியாது. பொன்னிலவனுக்கோ ஆண்டிறுதித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன. எனவே, அவர் நாள்தோறும் பள்ளிக்குச் சென்றாக வேண்டிய சூழல். இதனால் அவர் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானார். பொன்னிலவன் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?
WRITE A COMMENT