சராசரியாக மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்


சராசரியாக மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

சென்னை: சராசரியாக மாதத்திற்கு 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது. தகவல் முறைகேட்டை தடுக்கும் முயற்சிக்கு கிடைத்த பலனாகவே இது கருதப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் ஒருபகுதியாக அனைத்து சமூக வலைதளங்களும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்த நடவடிக்கை அறிக்கையை மாதந்தோறும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்தியர்கள் அதிக அளவில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்திவரும் நிலையில், வாட்ஸ்ஆப் கணக்கை முறைகேடாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அந்த கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்த அறிக்கையை வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த 2021 ஜூலை மாதம் முதல்முறையாக சமர்ப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக சராசரியாக மாதத்திற்கு 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 6 மாதங்களில் இந்தியர்களின் 1.5 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 18 லட்சத்து 58 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ‘என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன்(இ2இ)’ என்ற தொழில்நுட்பத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் அனுப்பும் தகவல்களை அந்நிறுவனத்தால் படிக்க முடியாது என்பதே அதன் பொருள். அப்படி இருக்கும்போது, வாடிக்கையாளர்கள் அனுப்பும் தகவல்கள் முறைகேடானவை என்பதை அந்நிறுவனம் எப்படி உறுதி செய்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் அளித்துள்ள பதிலில், ‘ஒரு சில கணக்குகள் துவக்கப்பட்ட சில வினாடிகளில் அந்தக் கணக்குகளில் இருந்து நூற்றுக்கணக்கில் தகவல்கள் பரிமாறப்படுகிறது. அவற்றை எங்களது ‘மெஷின் லர்னிங்’ தொழில்நுட்பம் கண்டறிந்து முடக்கிவிடும். ஒரு சிலரது கணக்குகளில் இருந்து தகவல்கள் அனுப்பப்படும்போது, அவை முறைகேடாக இருந்தால், சாதாரண வாடிக்கையாளர்கள் அந்த எண்களை முடக்குவார்கள். அத்தகைய எண்களையும் எங்கள் தொழில்நுட்பம் கண்காணித்து பிரச்சினைக்குரிய கணக்குகளை முடக்கிவிடும். இதுதவிர, புகார்கள் வந்தால், புகாருக்குரிய கணக்கின் தகவல்கள் பரிமாற்றம் சாதாரண வாடிக்கையாளர்களிடம் இருந்து முரண்பட்டு இருப்பதை உறுதி செய்து அக்கணக்குகளை முடக்கி விடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x