நாளைய விஞ்ஞானி போட்டியில் புதிய கண்டுபிடிப்புக்கு பதக்கம் வென்ற மாணவிகள்


நாளைய விஞ்ஞானி போட்டியில் புதிய கண்டுபிடிப்புக்கு பதக்கம் வென்ற மாணவிகள்

திண்டுக்கல்

`இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்திய மாநில அறிவியல் திருவிழாவில் நாளைய விஞ்ஞானி போட்டியில் புதிய கண்டுபிடிப்புக்காக சின்னாளபட்டி மாணவிகள் பதக்கம், சான்றிதழ், ரொக்கப் பரிசு பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆண்டுதோறும் உருவாக்கி வருகின்றனர். இந்த ஆண்டு `இந்து தமிழ்' நாளிதழ், வேலூர் விஐடி பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நாளைய விஞ்ஞானி போட்டியை நடத்தின.

இதில் சேரன் வித்யாலயா பள்ளி மாணவிகள் எம்.சுஜா, ஆர்.திவ்யதர்ஷிணி, ஜி.சரயுதேவி, பி.சக்திஐஸ்வர்யா. எம்.தர்ஷினி ஆகியோர் ஒரே தறியில் இரண்டு நாடாக்களைக் கொண்டு விரைவாக நெசவு செய்யும் தறியைக் கண்டுபிடித்தனர். இதை வேலூரில் நடந்த நாளைய விஞ்ஞானி மாநில அறிவியல் திருவிழாவில் காட்சிப்படுத்தி செயல் விளக்கமும் அளித்தனர். இதற்காக இந்த மாணவிகளுக்கு சிறந்த படைப்புக்கான பதக்கம், ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இது குறித்து மாணவிகள் கூறியதாவது:கடந்த 2017-ம் ஆண்டு ஒன்பதாவது படிக்கும்போது இரட்டைதறி நெசவு முறையைக் கண்டுபிடித்தோம். அதில் சில கோளாறுகள்கண்டறியப்பட்டதால் அவற்றை சரிசெய்ய தொடர்ந்து முயற்சித்தோம். தறிகூடங்களுக்கு சென்று ஆராய்ந்தோம். இதையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு முழுமையாக இரட்டை தறி நெசவு முறையைக் கண்டுபிடித்தோம். இதன் மூலம்நெசவாளர்கள் சிரமம் இல்லாமல் விரைவாக கைத்தறி சேலைகள் உள்ளிட்டவற்றை நெய்ய முடியும்.

மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் `இந்து தமிழ்' நாளிதழ் நடத்திய மாநில அளவிலான நாளைய விஞ்ஞானி மாநில அறிவியல் திருவிழாவில் எங்கள் படைப்புக்களை காட்சிப்படுத்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தோம். எங்களுக்குப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு கிடைத்தது. இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளியின் முதல்வர் என்.திலகம், ஆசிரியை ஆர்.பாண்டிச்செல்வி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். எங்கள் ஊர், நெசவாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் தறியில் புதிய முறையை கண்டுபிடிக்க ஆர்வம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரிசு பெற்ற மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x