நிகழ்வு: நவ. 20 விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம்


நிகழ்வு: நவ. 20 விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம்

உலக கழிப்பறை நாள்

நவ. 19

இவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு பிறகும் திறந்தவெளியில் கழிவுகளை அகற்றும் நிலையிலும் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டுக்கு இடையிலும் பலர் வாழ்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தன் வீட்டில் பாதுகாப்பான பிரத்தியேக கழிப்பறை இருப்பது துப்பரவின் முக்கிய அங்கமாகும். ஆனால், இந்தத் துப்புரவு
அளவுகோல் பலரைச் சென்றடைய வில்லை. உலக அளவில் 420 கோடிப் பேருக்கு சுகாதாரமான கழிப்பறை கிடைக்கவில்லை.

இந்த நிலையைத் துப்பரவு நெருக்கடி என்று வரையறுத்து அதை தீர்ப்பதற்கான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று உலக கழிப்பறை நாளை அனுசரிக்க வேண்டும் என்று
2001-ல் அறிவித்தது உலக கழிப்பறை நிறுவனம். 2013-ல் இதை ஐநா ஏற்றுக்கொண்டது. 2019-ம் ஆண்டுக்கான உலகக் கழிப்பறை நாளின் கருப்பொருள், ‘யாரையும் கைவிடாமல் செயல்பட்டு ஏற்றத்தாழ்வை அகற்றுதல்’. பாதுகாப்பான கழிப்பறை இல்லாதவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம்

நவம்பர் 20

விண்வெளியில் உள்ள புவியின் தாழ் சுற்றுப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் 1998 நவம்பர் 20 அன்று நிறுவப்பட்டது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்துகொண்டே பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்த இது வழிவகுக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டுத் திட்டம் இது.

இதன் உரிமை இந்த நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் நிர்வகிக்
கப்படுகிறது. 2000-ம் ஆண்டு நவம்பர் 2 முதல் இங்கு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். இதுவரை 18 நாடுகளைச் சேர்ந்த 230-க்கும் மேற்பட்டோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். குறைந்தபட்சம் 2024வரை சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உலக தொலைக்காட்சி நாள்

நவம்பர் 21

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு 20-ம் நூற்றாண்டில் புழக்கத்துக்கு வந்தது தொலைக்காட்டிப் பெட்டி. அப்போதிலிருந்து இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடு கொடுத்து உருமாறி வந்திருக்கிறது தொலைக்காட்சி.

மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் செலுத்தக்கூடிய சர்வதேச விவகாரங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் சாதனமாகவும் தொலைக்காட்சி உள்ளது. இதை உணர்ந்து ஐநா நவம்பர் 21-ஐ உலகத் தொலைக்காட்சி தினமாக 1997-ல் அறிவித்தது. 1996 நவம்பர் 21-ம் தேதி அனைத்துலக தொலைகாட்சிக் கருத்தரங்கம் நடைபெற்றதனால் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இளம் வயதில் சாதித்த மைக் டைசன்

நவம்பர் 22

புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். 1986 நவம்பர் 22 அன்று நடந்த உலக குத்துச் சண்டை கவுன்சிலின் ஹெவி வெய்ட் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் ட்ரவர் பெர்பிக் என்பவரை தோற்கடித்ததன் மூலம் உலகில் மிகக் குறைந்த வயதில் ஹெவிவெய்ட் சாம்பியன் ஆனவர் என்ற பெருமையைப் பெற்றார் டைசன்.

- தொகுப்பு: கோபால்

FOLLOW US

WRITE A COMMENT

x