கேப் கேனவரல்
அமெரிக்காவின் மர்ம விண்கலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரமாக பூமிக்குத் திரும்பி உள்ளது.
விண்வெளியில் தங்களின் பலத்தை காட்ட, ஒவ்வொரு நாடும் தனது செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றன. அதில் பல நாடுகள் தங்கள் விண்வெளித் திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்கின்றன. ஆனால், அமெரிக்காவின் எக்ஸ்-37பி ரக விண்கலம் என்ன காரணங்களுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.
அந்த வகையில், 5வது முறையாக எக்ஸ்-37பி ரக விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) ராக்கெட் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், தனது 780 நாட்கள் ஆய்வுப் பயணத்தை முடித்துக் கொண்டு, எக்ஸ்-37பி விண்கலம் நாசாவுக்கு சொந்தமான புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கியது.
ஆனால், இந்த விண்கலம் எதற்காக அனுப்பப்பட்டது, விண்ணில் எந்த வகையான ஆய்வுகளை நடத்தியது, என்னென்ன தகவல்களைச் சேகரித்தது போன்ற விவரங்கள் எதையும் நாசா வெளியிடவில்லை.
விரைவில் 6-வது விண்கலம்
அமெரிக்க விண்கல வரிசையில் எக்ஸ்-37பி விண்கலம்தான் அதிக நாட்கள் விண்ணில் இருந்தது. முன்னதாக, 2015-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட எக்ஸ்-37பி ரகத்தின் 4வது விண்கலம் 718 நாட்கள் விண்ணில் சுற்றி ஆய்வு செய்தது.
இந்நிலையில், எக்ஸ்-37-பி ரகத்தின் 6-வது விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது குறிப் பிடத்தக்கது.
WRITE A COMMENT