மனோஜ் முத்தரசு
ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் இணைந்து கிழக்கு அன்டார்டிகாவில் மிக பிரம்மாண்டமான கடல் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளன. இந்த திட்டத்துக்கு சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா - பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா இணைந்து, கிழக்கு அன்டார்டிக் கடலை பாதுகாக்க 10 லட்சம் சதுர கி.மீ. அளவில், மிகப்
பெரிய கடல் சரணாலயம் அமைக்க 2010-ம் ஆண்டு திட்டமிட்டன. ஆனால், அன்டார்டிக் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ஆணையத்தின் (சிசிஏஎம்எல்ஆர்) கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
சிசிஏஎம்எல்ஆர் அமைப்பில் உள்ள 26 நாடுகளும் இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் கடல் சரணாலயம் அமைக்க முடியும். இந்த திட்டத்தை சீனாவும், ரஷ்யாவும் தொடக்கத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வருகின்றன. தற்போது இதுகுறித்து சிசிஏஎம்எல்ஆர் கூட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட்டில் நடந்து வருகிறது.
முன்னதாக, ரோஸ் கடலில் 1.55 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவில் அன்டார்டிக் சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சுசன் லே கூறுகையில், “கிழக்கு அன்டார்டிக் கடல் சரணாலய திட்டமானது, அப்பகுதியில் உள்ள நீர் திட்டுகள், கடல் விலங்குகளுக்கு உணவளிக்கும் தனித்துவமான பகுதியாக திகழ்கிறது” என்றார்.
கொலராடோ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகளின் உதவிபேராசிரியர் கசாண்ட்ரா ப்ரூக்ஸ் கூறுகையில், “காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்களின் பெருக்கம் ஆகியவற்றால் அப்பகுதி அச்சுறுத்தலில் உள்ளது. எனவே அப்பகுதியை பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை” என்றார்.
இதுகுறித்து லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் மூத்த அரசியல் விரிவுரையாளர் டேனியல் ப்ரே கூறுகையில், “இந்த திட்டத்துக்கு சம்மதிக்கக் கூடாது என்று சீனாவுக்கு ரஷ்யாஅழுத்தம் கொடுக்கிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற சிசிஏஎம்எல்ஆர் கூட்டங்கள் தோல்வியில் முடிந்ததால்,பூங்கா அமைக்க முடியாது என்ற விரக்தி உருவாகி உள்ளது. இதுபோக வெடெல் கடல் மற்றும் அன்டார்
டிக் தீபகற்பத்தில், மேலும் இரண்டு கடல் பூங்கா திட்டங்களையும் சிசிஏஎம்எல்ஆர் பரிசீலித்து வருகிறது. கிழக்கு அன்டார்டிகாவில் கடல் சரணாலயம் அமையுமா என்பது, நவம்பர் 1-ம் தேதி தெரிய வரும்’’ என்றார்.
அன்டார்டிகாவில் அரிய உயிரினங்கள்
சரணாலயம் என்பது விலங்குகள், தாவரங்கள், நிலப்பரப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள பொருட்கள் ஆகியவற்றை பாது
காக்க அமைக்கப்படும் இடம்.
எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் உள்ள முண்டன்துறையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் அருகி வரும் புலிகளுக்காக இந்த சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. முண்டன்துறை பகுதியில் புலிகள் அதிகமாக வசிக்கின்றன. இந்த இடத்தை வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாத்தால்தான், அங்கு வசிக்கும் உயிரினங்களையும் பாதுகாக்க முடியும். அந்த வகையில்தான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் இணைந்து கிழக்கு அன்டார்டிகாவில் கடல் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளன. அன்டார்டிகாவில் பல அரிய வகை கடல் உயிரினங்கள் வாழ்கின்றன.
இப்பகுதியில், மீன்பிடி தொழில் அதிகமாக நடக்கிறது. இதனால், அப்பகுதியில் கடலை நம்பி இருக்கும் பிற உயிரினங்களுக்கும் ஆபத்துஏற்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும்தவறுகளால், கிழக்கு அன்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவதும்
அதிகரித்துள்ளது. அப்பகுதி வழியாகசெல்லும் கப்பல்கள், பனிப்பாறைகளை நொறுக்கிச் செல்கின்றன. மேலும், கணக்கிட முடியாத குப்பைகளை கொட்டுகின்றன. இதை தடுக்கவே கிழக்கு அன்டாடிகாவில் கடல் சரணாலயம் அமைக்க ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் முயற்சி செய்து வருகின்றன.
எதிர்ப்பதற்கான பல காரணங்கள்
கிழக்கு அன்டார்டிகாவில் கடல் சரணாலயம் போக இன்னும் 2 திட்டத்தை சிசிஏஎம்எல்ஆர் வைத்துள்ளது. இதனால் 3-ம் சேர்த்து 7 மில்லியன் சதுர கிலோ மிட்டர் கடல் பரப்பு சரணாலயமாக மாற்றப்படும். இதனால், தங்களின் மீன்பிடி தொழில் பாதிக்கும் என்று சீனா கருதுகிறது. சரணாலயம் அமைந்தால், சர்வதேச கடல் எல்லை விதிகள், அப்பகுதியில் செயல்படாது. சரணாலய விதிகளை சீனா, ரஷ்யா மீற முடியாத நிலை ஏற்படும். இதனால் தங்கள் நாட்டு கப்பல்களையும் அப்பகுதியில் நிறுத்த முடியாது. அது போர்க் கப்பலாகவும், சரக்கு கப்பலாகவும் இருக்கலாம்.
இதன்காரணமாக கடற்பரப்பில் தங்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக இரு நாடுகளும் கருதுகின்றன. இதனால்தான், இரு பெரிய நாடுகளும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சரணாலயம் அமைத்தால் சீனாவுக்கு பெரிய பாதிப்பு எதும் ஏற்படாது. ஆனால், ரஷ்யா சீனாவுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த திட்டத்துக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு வேறு ஏதோ காரணங்கள் உள்ளன. வருங்காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமான கடற்பகுதியிலும் சரணாலயம் அமைக்க கோரிக்கை வரலாம் என்று ரஷ்யா நினைக்கலாம் என்று சிசிஏஎம்எல்ஆர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 1-ம் தேதி நடக்கும் கூட்டத்தில்தான், சீனா-ரஷ்யா தங்களின் கருத்துக்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WRITE A COMMENT