இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வாட்ஸ் அப் பே சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல குறுஞ்செய்தி வழங்கு நிறுவனம் வாட்ஸ் அப். இந்தச் செயலியை இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம், பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் குறித்த ஆய்வுகள் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வந்தன. இதில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ் அப் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வாட்ஸ் அப் பே சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பேடிஎம், போன்பே, கூகுள் பே ஆகிய செயலிகள் பயனர்களுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை எளிதாக்கி விட்டன. இந்நிலையில் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்படும் 'வாட்ஸ் அப் பே' சேவையால், மற்ற செயலிகளின் தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ் அப் சர்வதேசத் தலைவர் வில் கேத்கார்ட் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ''வாட்ஸ் அப் பணப் பரிமாற்றம் சேவை சரியாக வேலை செய்யும்பட்சத்தில், இந்தியாவின் வளர்ந்துவரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில், நிதி நிலையைத் துரிதப்படுத்தும். இந்தியா முழுவதும் விரைவில் இந்தச் சேவை தொடங்கப்படும்'' என்றார்.
முன்னதாகம் கடந்த மே மாதத்தில் வாட்ஸ் அப் நிறுவனம், பணப் பரிமாற்றத்துக்கான சோதனை ஓட்டம் ஜூலை மாதத்தில் முடிவடைந்துவிடும் என்றும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் அடிப்படையிலேயே வாட்ஸ் அப் பணப்பரிமாற்ற சேவை இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 150 கோடி மக்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT