கற்பிக்கும்போது எளிதில் மொழியை மாற்றலாம்: அமேசான் அலெக்ஸாவில் அறிமுகம்


கற்பிக்கும்போது எளிதில் மொழியை மாற்றலாம்: அமேசான் அலெக்ஸாவில் அறிமுகம்
மகாராஷ்டிராவின் பட்னேரா பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பெண் ரோபா வடிவத்தில் அலெக்ஸா | கோப்புப்படம்

அமேசான் மெய்நிகர் உதவியாளரான (virtual assistant) 'அலெக்ஸா'வில் எளிதில் மொழியை மாற்றும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

( * விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என்பது உருவமற்ற, கண்ணுக்குப் புலப்படாத ஒரு செயலியிடம் இருந்து, நமக்குத் தேவையான தகவல்களை, குரலின் மூலமாக கேட்டுப் பெற்றுக் கொள்வதாகும். உதாரணம்: ஆப்பிள் போனின் 'சிரி', கூகிளின் 'கூகிள் அசிஸ்டென்ட்' )

அரசுப் பள்ளிகள் உட்பட, இந்தியாவில் உள்ள ஏராளமான பள்ளிகள், வீடுகளில், விர்ச்சுவல் அசிஸ்டென்ட் அலெக்ஸா ஆங்கிலம், கணக்கு, கவிதை, பாடல்கள், பொது அறிவு, வானிலை உள்ளிட்ட ஏராளமான தகவல்களைச் சொல்லிக் கொடுக்கிறது. பள்ளிகளில் பாடத்திட்டம் தாண்டி, இசை, பாடல் உள்ளிட்ட கூடுதல் திறன்களும் மாணவர்களுக்கு கூடுதலாகக் கற்பிக்கப்படுகின்றன.

ஆங்கிலம் மட்டுமே அறிந்த அலெக்ஸா, க்ளியோ (Cleo) மூலம் இந்திய மொழிகளையும் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது. இந்நிலையில், கற்பித்தலின்போது எளிதில் மொழியை மாற்றும் வசதி, தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.

இதன்மூலம் அலெக்ஸாவிடம் நாம் பேசும்போது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழியை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். மொழி மாற்றத்துக்கான செட்டிங்ஸில் சென்று, மொழிகளை மாற்ற வேண்டியதில்லை.

உதாரணத்துக்கு அலெக்ஸாவிடம் இந்தியில் ஒரு கேள்வியைக் கேட்டால், அது இந்தியிலேயே பதில் சொல்லும். அடுத்த நொடியிலேயே ஆங்கிலத்தில் பேசினால், ஆங்கிலத்தில் பதிலளிக்கும். இதன்மூலம் இந்திய சந்தையில் அலெக்ஸாவின் விற்பனையை அதிகரிக்க, அமேசான் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x