பொள்ளாச்சி: மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளில் அப்பள்ளியில் சுமார் 23 ஆயிரம்மாணவர்கள் படித்து முடித்து சென்றுள்ளனர். இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஞாயிறறுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் சதானந்தம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் பங்கேற்ற பள்ளியின்முன்னாள் மாணவரும், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும், சந்திராயன்-1 திட்டத்தின் இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை மாணவர் சங்கத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்துபேசியதாவது:
மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். இங்குள்ள முன்னாள் மாணவர்களில் பலரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் முன்னேறி உள்ளனர்.
இந்த பள்ளியில் படித்த நாங்கள் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடிகிறது என்றால், உங்களாலும் உயரத்தை தொட முடியும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் எந்த நிலையிலும் சோடை போய்விட மாட்டார்கள். ஒரு சாதாரண நிலையில் உள்ள மாணவர் படித்து முன்னேறும்போது அவரது குடும்பத்தின் நிலை உயர்கிறது. நாட்டின் நிலை மாறுகிறது. சிறப்பான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதிகம் உள்ள பள்ளிகள் அரசு பள்ளிகள்தான். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறும்போது, “அமெரிக்கா விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு அங்குள்ள கட்டமைப்பு சரியான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகு மனிதனை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதேபோல இந்தியாவில் ககன்யான் விண்கலம் திட்டம் மூன்றடுக்கு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முதல் கட்ட பணிகள் இந்தாண்டு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இரண்டாம் கட்டமாக ஆளில்லா விண்கலம் சென்று வந்த பிறகு, மூன்றாவது கட்டமாக மனிதர்களை அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.
WRITE A COMMENT