சென்னை: அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு 2 மாதங்களாக பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
நடப்பு கல்வி ஆண்டில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, 2022-23-ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். அதன்படி அங்கன்வாடி மையத்திற்கு ஒரு தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டும். இல்லம்தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாதபோது இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற பிற நபர்களை நியமிக்கலாம். அவர்களது பணி முற்றிலும் தற்காலிகமானது. இந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் மாதந்தோறும் வழங்க வேண்டும். இந்த நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளிமேலாண்மைக் குழுவிற்கு வழங்கப்படும்.
தற்காலிக ஆசிரியர்கள் தினமும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பணியாற்ற வேண்டும். அவர்களின் பணிக்காலம் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் ஆகும். பள்ளியின் கடைசி வேலை நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவர்.
தற்காலிக ஆசிரியர்கள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை கையாள்வதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றி 14-10-2022-க்குள் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தற்காலிக ஆசிரியர்களை தேர்வுசெய்து பெயர்பட்டியலை பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பின.பல பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் அங்கன்வாடிக்கு வந்து எல்.கே.ஜி., யூ.கே.ஜி.வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
ஆனால், தற்காலிக ஆசிரியர்கள் யாருக்கும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதனால்அவர்களுக்கு பயிற்சியும், சம்பளமும் தரப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணியாற்றுவதாக தற்காலிக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர். வேறுவழியில்லாமல் பல பள்ளிகளில் அரசு ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்காலிக ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துவிட்டது. ஆனால், பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தினால் எப்படி சம்பளம் வழங்கப்படும்? அடுத்தாண்டு தான் பணிநியமன ஆணை வழங்கி, பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகேஅவர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.
WRITE A COMMENT