கோவை: கோவை அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளது. கோவை மாவட்டம் அரசூர் அரசுபள்ளி கடந்த 1962-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1981-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வைரவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது இப்பள்ளிக்கு ஐஎஸ்ஓ 9001:2015 தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தசான்றை பள்ளியின் வைர விழாக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.வெ.கோவிந்தராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.கண்ணனிடம் நேற்று வழங்கினார். இதுதொடர்பாக பள்ளியின்தலைமையாசிரியர் கே.கண்ணன் கூறியதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு இங்கு 860 மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். தற்போது 1,154 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தரச்சான்றுக்கு விண்ணப்பித்து, 3 கட்ட ஆய்வுக்கு பின் தற்போது சான்று கிடைத்துள்ளது. இந்த சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அதற்கு தொடர்ந்துதரத்தை தக்கவைக்க வேண்டும். அதற்காகவே சான்று வாங்கியுள்ளோம்.
ஐஎஸ்ஓ சான்று பெற கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துதல், மாணவர்களுக்கு தரமானகல்வியை வழங்குதல், அறிவியல்பூர்வமாக மாணவர்களை சிந்திக்க வைத்தல், சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதியை பராமரித்தல், மாணவர்களிடையே சமத்துவ உணர்வை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் ஆய்வு நடக்கும். அப்போது குறைகள் இருந்தால் தெரிவிப்பார்கள். அதை நிவர்த்தி செய்ய வேண்டும். உரியஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகே சான்று புதுப்பிக்கப்படும். கடந்த ஜூலையில் பள்ளியின் வைரவிழா நிகழ்வுகள் தொடங்கின.
பல்வேறு தலைப்புகளில் பயிலரங்கங்கள், மாரத்தான் போட்டி, கலை, இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகள், அறிவியல் திருவிழா என பல்வேறு நிகழ்வுகளை பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளிக்கென தனியே யு-டியூப் சேனலும் தொடங்கப்பட்டுள்ளது. அதில், பள்ளி நிகழ்வுகளை பதிவேற்றம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் ஊராட்சிமன்றத் தலைவர் அ.வெ.கோ.மனோன்மணி, துணைத்தலைவர் சு.சுதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சோ.பெரியார் செல்வி, முன்னாள் மாணவர்கள் கருப்புசாமி, தனராஜ், சிவம்குமார், அ.ப.சிவா, தண்டபாணி, சுரேஷ், ஆறுச்சாமி, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
WRITE A COMMENT