தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகேயுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கிராம மக்கள் ரூ.13 லட்சம் மதிப்பில் பள்ளி பெயரில் வேன் வாங்கித் கொடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள பூவத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பூவத்தூர், பேய்கரம்பன்கோட்டை, பாளமுத்தூர், குடிக்காடு, தெலுங்கன்குடிக்காடு, திருமங்கலக்கோட்டை, மேலையூர், கக்கரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 190 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊராட்சித் தொடக்கப் பள்ளி, மழலையர் ஆங்கிலப் பள்ளியில் 185 பேர் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், பள்ளியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பூவைகல்வி வளர்ச்சிக் குழு மற்றும் பொது நல அறக்கட்டளை என்றபெயரில், பூவத்தூர் கிராம இளைஞர்கள், கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என 150 பேருக்கும் அதிகமானோர், பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுத்து வருகின்றனர். அவர்கள் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக கிராம மக்கள் மற்றும் பூவை கல்வி வளர்ச்சிக் குழு மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில், பள்ளிக்கு ரூ.13 லட்சம் செலவில் வேன் வாங்கி வழங்கினர்.
இதன் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் மு.சிவக்குமார் கொடியசைத்து வைத்து வேன் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் எம்.கோவிந்தராஜ்(இடைநிலை), திராவிடச்செல்வன் (தொடக்க நிலை), தலைமை ஆசிரியர்கள் ஹேமலதா(உயர்நிலைப் பள்ளி), லாசரஸ் (தொடக்கப் பள்ளி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பூவை கல்வி வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் கூறும்போது, "எங்கள் பள்ளி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து செய்து வருகிறோம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஆங்கில வழியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுத்தோம். எங்கள் குழுமூலம் 8 ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இதனால் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது" என்றனர்.
WRITE A COMMENT