சென்னை: சென்னை மாவட்டத்தில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என தமிழ்வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி இயக்குநர் ந.அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அறக்கருத்துக்கள் அடங்கிய திருக்குறட்பாக்களின் மாண்பை வருங்கால மாணவர்கள் இளம் வயதிலேயே முற்றோதல் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, அறநெறி ஆற்றலை தன்னகத்தே பெற்று நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தை ஆண்டு தோறும் செயல்படுத்தி வருகிறது.
திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசுவழங்கிப் பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறி வழிவகுப்பதாகவும் அமையும். 1330குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பரிசு பெறு வதற்கு அரசுக்குப் பரிந்துரை செய் யப்படுகிறார்கள். அந்த வகையில், 2022–2023-ம் ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ , மாணவிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னைஎழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு நேரிலோ அல்லது "தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், சென்னை மாவட்டம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008" என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும்.
மாணவர்கள் 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன்வேண்டும். திருக்குறளின் அடை மொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண் டும்.
சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் இப்பரிசை இதற்கு முன்னர் பெற்றவராக இருக்கக் கூடாது. இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 044–28190448, 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
WRITE A COMMENT