விருதுநகர்: படிக்கும் காலத்தில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் உயர்ந்த லட்சி யத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கூறினார்.
விருதுநகர் மாவட்ட கல்வித் துறை மற்றும் மதுரை பத்மராஜம் கல்வி குழுமம் சார்பில் வணிகவியல் துறையில் மேற்படிப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆமத்தூரில் உள்ள ஏஏஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பத்மராஜம் கல்வி குழுமத்தின் பேராசிரியர் அக்பர் பாட்ஷா வரவேற்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞான கவுரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாண்டிச்செல்வி, மகாலட்சுமி, பத்மராஜம் கல்வி குழும தலைவர் பாலன், ஆடிட்டர் தவமணி, பட்டய கணக்காளர் சங்க தென்னிந்திய தலைவர் சரவணக்குமார், கல்லூரி இணைச் செயலாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமை வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
11, 12-ம் வகுப்பு படிக்கும்போது அடுத்ததாக மேற்படிப்பில் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. அவர்களுக்கு சரியான பாதையை தேர்ந்தெடுக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும். ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் இருந்தால் அனைத்து மாணவர்களும் சாதனை படைப்பார்கள்.
பள்ளி மாணவர்களின் மேற்படிப்புக்கு வழிகாட்டுவதற்காகத்தான் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர்ந்த பின்னர் வெற்றியும் தோல்வியும் மாணவர்களின் கையில்தான் உள்ளது. சிறந்த எதிர்காலத்துக்கான திட்டமிடல், நிதி ஆளுமை, சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தல் ஆகிய மூன்றும் மிக அவசியம். எனவே, படிக்கும் காலத்தில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் உயர்ந்த லட்சியத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்பயிற்சி வகுப்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகவியல் துறை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
WRITE A COMMENT