கோவை: கொடிநாள் நிதி வசூலிப்பது ஏன்? என்பது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்தார்.
படைவீரர் கொடிநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடிநாள் நிதியை வழங்கி வசூலை தொடங்கிவைத்தார். பின்னர், கடந்த ஆண்டில் சிறப்பாக கொடிநாள் நிதிவசூல் பணியை மேற்கொண்ட 8 அலுவலர்களுக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, “நாட்டின் முப்படைகளிலும் பணியாற்றிவரும் படைவீரர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளன்று கொடிநாள் நிதி வசூல் தொடங்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கொடிநாள் நிதி முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்காக வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சி.ரூபா சுப்புலட்சுமி, இந்திய கடற்படை ஐ.என்.எஸ். அக்ரானி கேப்டன் ஆகாஷ்ஜோசப், இந்திய தரைப்படை (110 பிரதேச ராணுவப் படை) லெப்டினன்ட் கர்னல் சத்யபிரசாத், தமிழ்நாடு பெண்கள் என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் ஜோஷி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக நல அமைப்பாளர் மல்லிகா அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
WRITE A COMMENT