மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்: விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு அறிவுரை


மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்: விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு அறிவுரை
விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு இணைந்து எழுதிய ‘இந்தியா75’ ‘விண்ணும் மண்ணும்' ஆகிய இரு புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு அவர்கள் பரிசளித்தனர். அருகில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இணை ஆணையர் பி.சாமூண்டேஸ்வரி உள்ளனர்.

சென்னை: மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி நிறைய சாதனைகள் படைக்க வேண் டும் என்று விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு அறிவுரை வழங்கினர்.

100 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5,000 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சியளிக்கும் ‘சிற்பி’(Students in Responsible Police Initiatives-SIRPI) என்ற சிறப்பு திட்டத்தை சென்னை காவல்துறை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டுப்பற்றை வளர்க்கும் ஊக்குவிப்பு நிகழ்ச்சி, சென்னை மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ‘நிற்பதுவே, பறப்பதுவே!’ என்ற தலைப்பில் போர் விமா னத்தைப் பற்றி ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு உரையாற்றினார். அப்போது, சுதந்திர இந்தியாவில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட லகு ரக போர் விமான திட்டத்தில் ராணுவ விஞ்ஞானிகள் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகளை காணொளி காட்சிகள் மூலம் விளக்கினார். முயற்சி செய்தால் மாணவர்கள் தங்களின சாதனைகள் மூலம் தேசத்தை உயர்த்தலாம் என்று குறிப்பிட்டார்.

விண்வெளி விஞ்ஞானியும், தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை, ‘வீடும், நானும், நாடும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தன் இளம்வயதில் தனக்கு கிடைத்த ஊக்குவிப்புகள் தன் வளர்ச்சியில் பங்கு வகித்தன என்று எடுத்துரைத்த அவர், முக்கிய நிலைகளில் நாம் எடுக்கும் முடிவுகள் நமது வெற்றியை தீர்மானிக்கின்றன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டதால் சந்திரயான், மங்கள்யான் திட்டங்கள் சாத்தியமாயின என்றார். எனவே, மாணவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு இரு விஞ்ஞானிகளும் பதிலளித்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, "சிற்பி திட்டம் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்" என்றார்.

விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு இணைந்து எழுதிய ‘இந்தியா75’ ‘விண்ணும் மண்ணும்' ஆகிய இரு புத்தகங்களையும் அமைச்சருக்கு அவர்கள் பரிசளித்தனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் ஜே.லோகநாதன், இணை ஆணையர் பி.சாமூண்டேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x