கோவை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் மாற்றுத் திறன் குழந்தைகள் சைகை மொழி யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
மாற்றுதிறன் குழந்தைகளுக்கான கல்வியை வலியுறுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுபள்ளிகளில் பிரார்த்தனை கூட்டத்தின்போது சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் சைகை மொழியில் திங்கள்கிழமை அன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறன் குழந்தைகள் பாடிய பாடல் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலைத்திறன் போட்டிகள், உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த நவம்பர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
அதன் தொடர்ச்சியாக உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர் 3) பள்ளிகள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அன்று சைகை மொழியில் மாற்றுத்திறன் மாணவர்கள் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சைகை மொழியில் பாட கற்றுக்கொண்ட மாற்றுத்திறன் குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்தை சைகை மொழியில் பாடினர். அவர்களோடு சேர்ந்து மற்ற குழந்தைகளும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இது, ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் புதுவித அனுபவமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, சைகை மொழி தமிழ்த்தாய் பாடலுக்கான வீடியோ பதிவு கோவை அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் குழந்தை யேசு காதுகேளாதோர் பள்ளி மற்றும் கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் காது கேளாத குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
WRITE A COMMENT