ராமநாதபுரம் | பள்ளியில் 1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு இலவச சைக்கிள்: சொந்த செலவில் வழங்கிய தலைமை ஆசிரியர்


ராமநாதபுரம் | பள்ளியில் 1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு இலவச சைக்கிள்: சொந்த செலவில் வழங்கிய தலைமை ஆசிரியர்
மேலக்கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்: கடலாடி அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியரே தனது சொந்த செலவில் 1-ம் வகுப்பு குழந்தைகள் 10 பேருக்கு இலவசமாக சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலக்கடலாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை யாசிரியராக பணியாற்றி வருபவர் சற்பிரசாதமேரி. இப்பள்ளியில் கடந்தசில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கைகுறைந்து கொண்டே வந்தது. இதைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் சற்பிரசாதமேரி தனது சொந்த செலவில் 1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார்.

சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பரமக்குடி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முருகம்மாள், கடலாடி வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயம், கடலாடி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல்முருகன், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தது குறித்து தலைமையாசிரியர் சற்பிரசாதமேரி கூறும்போது, அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்என்ற நோக்கில் எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பில் உள்ள 10 குழந்தைகளுக்கும் ரூ.30 ஆயிரத்தில் சைக்கிள் வாங்கிக் கொடுத்தேன். இதற்கு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை பார்த்து மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களும் எங்களது பள்ளியில்குழந்தைகளை சேர்க்க விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்த கல்வியாண்டில் மட்டும் அருகிலுள்ள பல்வேறு தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படித்த 35 குழந்தைகள் எங்கள் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ந்துள்ளனர்." என்றார்.

FOLLOW US

WRITE A COMMENT

x