திருப்பூர்: திருப்பூர் அருகே பொல்லிக்காளி பாளையத்தில் தாங்கள் படித்த அரசு பள்ளிக்கு 2 வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர் முன்னாள் மாணவர்கள்.
திருப்பூர் மாநகரை ஒட்டிய தாரா புரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு அவ்வப்போது நோட்டு, புத்தகம், மின்விசிறி எனசிறிய அளவில் உதவி வந்தனர். மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை என்பதை அறிந்த அவர்கள், 2 வகுப்பறைகளை கட்ட முடிவு செய்தனர். பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் உதவ, தற்போது ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து முன்னாள் மாணவர் மற்றும் பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் ரத்தினசாமி கூறியதாவது: இந்த பள்ளி 1950-களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. பலருக்கும் கல்வி போதித்த இடம். இதன் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம்.தொடக்கப் பள்ளியாக இருந்து படிப்படியாக தரம் உயர்ந்து மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது.
சுற்றுவட்டாரத்தில் இந்த பள்ளியோடு தொடங்கப்பட்ட பல பள்ளிகள், இன்னும் அதே நிலையிலோ அல்லது சில பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலோ உள்ளன. இன்றைக்கு இந்த பள்ளிஆலமரத்தின் விழுதுகளாக வளர்ந்துநிற்கிறது. நாங்கள் படித்த காலத்தில்சராசரியாக 300 பேர் படித்தனர். தற்போது திருப்பூர் கோவில்வழி, பெரிச்சிபாளையம், கரட்டாங்காடு எனமாநகரில் உள்ளவர்கள் கூட இந்த பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அந் தளவுக்கு இந்தப்பள்ளி இன்றைக்கு சக அரசுப் பள்ளிகளோடும், தனியார் பள்ளிகளோடும் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்களை நியமித்து மாணவர்கள் கற்றலில் தொய்வின்றி தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். அருகில் உள்ள வங்கிகள் மற்றும் தனியார் நிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியை பெற்று, தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறோம்.
ஒரு குழந்தையை 1-ம் வகுப்பில் இங்கு சேர்த்தால், பள்ளிப்படிப்பு முடியும் வரை வேறெந்த பள்ளிக்கும் செல்லமாட்டார்கள். அந்தளவுக்கு கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. பள்ளியின் நன்மதிப்பு தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ச்சியாக 100 விழுக்காடு தேர்ச்சி, பிளஸ்2-வில் கடந்த5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமதிப்பெண் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை அ.அனிதா கூறும்போது, “பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை 875 பேர் படிக்கின்றனர். 1-ம் வகுப்பு தொடங்கி 5-ம் வகுப்பு வரை 450 பேர் என மொத்தம் 1325 பேர் பயில்கின்றனர். தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர். பள்ளிக்கு ஆய்வக வசதி, விளையாட்டு மைதானம் வேண்டும். பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழுவும் பக்கபலமாக உள்ளனர்” என்றார்.
WRITE A COMMENT