மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமரவைத்து அரசு பள்ளி மாணவியை ஊக்குவித்த கலெக்டர்


மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமரவைத்து அரசு பள்ளி மாணவியை ஊக்குவித்த கலெக்டர்
மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த 9-ம் வகுப்பு மாணவி துர்கா லட்சுமியை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவரது இருக்கையில் அமரவைத்தார். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ‘உங்களைப் போல் ஐஏஎஸ் ஆவேன்’ என்று கூறிய மாணவியை ஆட்சியர் தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் தேநீர் விருந்து அளித்து அவர்களின் எதிர்கால கனவுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி துர்கா லஷ்மி,‘நான் படித்து உங்களைப் போல் ஆட்சியர் ஆவேன்’ என்றார். அவரது கனவை பாராட்டிய ஆட்சியர் குமார வேல் பாண்டியன் தனது இருக்கையில் மாணவி துர்கா லட்சுமியை அமரும்படி கூறியதுடன் ‘உன் ஆசை நிறைவேற வேண்டும்’ என்று வாழ்த்தினார். ஆட்சியர் இருக்கையில் அமர்ந்தது குறித்து மாணவி துர்கா லட்சுமி கூறும்போது, ‘‘எனக்கு இந்த வாய்ப்பளித்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது தாயை விட்டு தந்தை பிரிந்துவிட்டார். நான் படித்து ஐஏஎஸ் ஆகி என் அம்மாவை காப்பாற்றுவேன்’’ என்றார்.

FOLLOW US

WRITE A COMMENT

x