உதகை: நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக, இருளர் இன மாணவி மருத்துவம் படிக்கதேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு முறை முயற்சித்து, நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், கோத்தர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பழங்குடியின மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோத்தகிரி சோலூர்மட்டம் அடுத்த தும்பி பெட்டு பகுதியை சேர்ந்த இருளர் இனத்தைச் சேர்ந்த பாலன்- ராதா தம்பதியின் மகள் மதி(வயது 20), எம்பிபிஎஸ். படிக்க தேர்வாகியுள்ளார். பாலன் தேயிலை தோட்டவிவசாயியாகவும், ராதா ஆசிரியை யாகவும் பணியாற்றி வருகின்றனர்.
மதி கடந்த 2019-ம் ஆண்டுபிளஸ் 2 தேர்ச்சி பெற்று 406 மதிப்பெண்கள் பெற்றார். இதைத்தொடர்ந்து டாக்டருக்கு படிக்க முயற்சி செய்து யூ டியூப் வீடியோக்களை பார்த்து தானாகவே படித்து நீட் தேர்வு எழுதினார். ஆனாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியவில்லை. இதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்று இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 370 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.
தனது சாதனை குறித்து மாணவி ஸ்ரீமதி கூறும்போது, “நான் கோத்தகிரி பகுதியில் உள்ள ஹில்போர்ட் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் 4 முறை நீட் தேர்வு எழுதினேன். அப்போது இரண்டு முறை தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் அங்கு கூடுதல் பணம் கட்ட வேண்டி இருக்கும் என்பதால் என்னால் சேர முடியவில்லை. மருத்துவம் படிக்க வேண்டும் என்பதால் வேறு எந்த படிப்புகளிலும் சேராமல் மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன். இதனால் எனது தோழிகள், நண்பர்கள் என்னை கேலி செய்தனர். இறுதியாக தற்போது 4-வது முறையாக நீட் தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றேன். தற்போது திருநெல்வேலி அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை நல டாக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்வேன்” என்றார்.
WRITE A COMMENT