கோவை: சென்னையில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் படித்து வரும் ஆதரவற்ற 15 மாணவிகள் ஒருநாள் சுற்றுப் பயணமாக விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னையில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா மாணவிகள் விடுதியில் தங்கியுள்ள ஆதரவற்ற மாணவிகள் 15 பேர் விமானம் மூலம் கடந்த 5-ம் தேதி கோவைக்கு சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். விமானத்தில் மாணவிகளை சந்தித்து நடிகர் ஸ்ரீமன் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் திப்பீந்தர் சிங் கூறியதாவது: பெற்றோரால் கைவிடப்பட்டு விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் விமானபயண கனவை நனவாக்கி மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு தனியார் விமா னம் கோவையில் தரையிறங்கியது. அங்கிருந்து மாணவிகள் பேருந்தில் அவிநாசி சாலையில் ஜீடி கார் அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அம்மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், ஈஷா யோகா மையத்துக்கு மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு ஆதியோகி சிலை முன்பு மாணவிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இரவு உணவுக்குப்பின், 9 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்பட்டனர். அவர்களின் வாழ்நாளில் இந்த விமான பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். எதிர்காலத்தில் படித்து உயர் பதவிக்கு சென்றால் தாங்களும் இதுபோன்ற சேவையில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த விமான பயணம் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளை கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20, வடக்கு பெண்கள் வட்டம் 11 மற்றும் மெட்ராஸ் அன்கோரேஜ் ரவுண்ட் டேபிள் 100 ஆகிய அமைப்புகள் செய்திருந்தன.
WRITE A COMMENT