சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி ஆன்லைன் படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்கள் 87 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கான சேர்க்கை ஆணைகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். நாட்டின் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி ஆன்லைன் வாயிலாக பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பை 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் பட்டப் படிப்பை படிக்கும் மாணவர்கள், பணியில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம்.
அந்த வகையில், ‘அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இருந்து அரசு பள்ளிமாணவ, மாணவிகள் 87 பேருக்கு இப்படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. ஐஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். அவர் பேசும்போது, சென்னை ஐஐடி வழங்கும் ஆன்லைன் பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவர்களை வாழ்த்துகிறேன், தமிழக அரசு மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், குறைந்தவிலையில் கல்வி கற்கவும், இதுபோன்ற இத்தகைய புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வீ.காமகோடிக்கு நன்றி என்று குறிப்பிட்டார். ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, "ஐஐடி பிஎஸ் திட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்பதுதான் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் நோக்கம். இந்த முன்முயற்சியின் மூலம் முதலாவது பேட்ச் மாணவர்கள் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக- பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். எங்களுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வரும் தமிழக அரசுக்கு நன்றி" என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஐஐடி ஆன்லைன் படிப்பு பொறுப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆன்லைன் படிப்பின் அடுத்தபேட்ச் வரும் ஜனவரியில் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.
WRITE A COMMENT