திருப்பத்தூர்: செயற்கைக்கோள் தொழில் நுட்ப பயிற்சிக்கு வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 6 பேர் இஸ்ரோவுக்கு புறப்பட்டு சென்றனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தயாரிக்கும் 75 சிறிய வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ நிறுவனம் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் வடிவமைக்கும் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட உள்ளன. இதில், ஒரு செயற்கைக்கோள் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பில் தயாராக உள்ளது. இதற்காக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இருந்து சுமார் 86 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 12 மாணவர்கள் மலை கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
அகஸ்தியர் செயற்கைக்கோள்: சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக 1.5 கிலோ எடையில் தயாரிக்கப்பட உள்ள சிறிய வகையிலான செயற்கைக்கோளுக்கு ‘அகஸ்தியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்தகைய செயற்கைக்கோள் தயாரிக்க பள்ளிமாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ.நிலையங்களில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக் கான செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சிகள் 4 நாட்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புபெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட மலைரெட்டியூர் அரசு பள்ளியில்12-ம் வகுப்பு படித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர் தமிழ்நேசன், மாணவிகள் செந்தாமரை, சினேகா, பவித்ரா, வினிதா, பூஜா என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வழியனுப்பு நிகழ்ச்சி: செயற்கைக்கோள் தொழில் நுட்ப பயிற்சிக்கு வாணியம்பாடியில் இருந்து பெங்களூருவுக்கு ரயில் மூலம் மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். பயிற்சிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் பரிசுகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். பயிற்சி அளிக்கும் ஆசிரியர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கிரி ஆகியோரும் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றனர்.
WRITE A COMMENT