கோத்தகிரி: கோத்தகிரியை பசுமையாக்கும் வகையில் பனங்குடி வனப்பகுதியில் பள்ளி மாணவர்கள் விதைப் பந்துகளை வீசினர். நீலகிரி வனக்கோட்டம் கோத்தகிரி வனப்பகுதியை பசுமையாக்கும் முயற்சியாக, கேசலாடா தொடக்கப் பள்ளி மாணவர்கள் மூங்கில், மலை வேம்பு, நாவல் என 100-க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை பனங்குடி பகுதியில் வனத்தில் வீசி எறிந்தனர். இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் ஜெயசீலன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதா, ஹெரிட்டேஜ் பவுண்டேசன் நிறுவனர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக ஹெரிட்டேஜ் பவுண்டேசன் நிறுவனர் கண்ணன் கூறும்போது, ‘‘பனங்குடி சோலை பாரம்பரியம் மிக்க பகுதியாகும். இந்த சோலையை தொல்லியல் துறையின் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளுக்கு உட்படுத்தி, இங்குள்ள நடுகற்கள் சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கண்டறிந்தள்ளனர். இந்த வரலாற்று சுவடுகள் அழிந்து போகாமல் இருக்க அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து பெயர் பலகைகள் வைத்து பராமரிக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க இந்த சோலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமை நிலைக்கு மாற்றவும் விதைப்பந்துகள் எறியப்பட்டன’’ என்றார்.
WRITE A COMMENT