நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேரும் செக்யூரிட்டி பணியாளரின் மகள்


நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேரும் செக்யூரிட்டி பணியாளரின் மகள்
ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குநர் கவிதாசன் ஆகியோரை குடும்பத்தினரோடு சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி சுவாதி.

கோவை: நீட் தேர்வை 3-வது முறையாக எழுதி அதிக மதிப்பெண் பெற்றுள்ள கோவை செக்யூரிட்டி பணியாளரின் மகளுக்கு சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

கோவை ரூட்ஸ் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருபவர் டி. மகாதேவன். இவரது மனைவி மலர் மணி. இத்தம்பதிக்கு சுவாதி, தக்ஷனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் தக்ஷனா பிளஸ் 1 படித்து வருகிறார். மூத்த மகள் சுவாதி மேட்டுப்பாளையம் நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். அவர் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு499 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்காக முதல் முறையாக எழுதியதில் 720-க்கு 152 மதிப்பெண்களும் 2-வதுமுறையாக தேர்வு எழுதி 499 மதிப்பெண்களும் பெற்றார். தொடர்ந்து முயற்சி எடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வில் 542 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றார். நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் அவருக்கு இஎஸ்ஐ மருத்துவமனை அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் சென்னை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து தனது தந்தைபணியாற்றி வரும் ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமசாமி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் செயலாளர் கவிதாசன் ஆகியோரை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் சாதனை படைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவது பெருமையாக உள்ளது என்று மாணவி சுவாதியை ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமசாமி, கவிதாசன் ஆகியோர் பாராட் டினர்.

இது குறித்து மாணவி சுவாதி கூறும்போது, "மறைந்த எனது சகோதரி பிரீத்தி அறிவுரைப்படி நான் மருத்துவராக வேண்டும் என்று அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் முழு முயற்சியுடன் படித்து இன்று மருத் துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளேன்.சகோதரியின் கனவை நனவாக்கும் வகையில் நன்றாக படித்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். என் தந்தை சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். எனது முயற்சிக்கு ரூட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், எனது பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்கியதால்தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. ரூட்ஸ் நிறுவன தலைவர் மற்றும் இயக்குனர் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி" என்றார்.`

FOLLOW US

WRITE A COMMENT

x