உடுமலை: சென்னையில் நடைபெற்ற உலக சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் உடுமலையை சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சேரன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி ஜான்பால்-கவுதமி. இவர்களின் 3 வயது மகன் விதுஷன், விண்வெளி, கோள்கள் மற்றும் ராக்கெட்கள் குறித்த 50 கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் சரியாக பதில் அளித்ததன் மூலம் ‘கலாம் உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பிடித்திருந்தான்.
ஏற்கெனவே 60 தமிழ் வருடங்களை 1 நிமிடம் 6 விநாடிகளில் மனப்பாடமாக கூறியதன் மூலம் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து தங்க பதக்கம் பெற்றிருந்தார். தமிழில் எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்கள், புறநானூற்றுப் பாடல் வரிகள், கணித வடிவங்கள், எண்கள், வண்ணங்கள், வாரத்தின் நாட்கள், மாதங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறுவது உள்ளிட்ட சாதனைகள் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாளன்று சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உலக சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இளம் சாதனையாளராக தேர்வு செய்யப்பட்ட விதுஷனுக்கு கலாம் உலக சாதனை புத்தகம் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் ஐகிரி லோகேஷ் விருது வழங்கி கவுரவித்தார்.
WRITE A COMMENT