காஞ்சிபுரம்: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடிப்பது குறித்து காஞ்சிபுரம் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் தீயணைப்புத்துறையினர் பள்ளிகளுக்கு சென்று பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளிப்பது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பாஸ்கரன், அரசு, பார்த்திபன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான, நைலான் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். நைலான் ஆடைகள் வேகமாக தீப்பற்றி எறியும் அபாயம் இருப்பதால் அந்த ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கும்போது அருகில் ஒரு பெரிய வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருட்களையும் பட்டாசு வெடிக்கும் போது அருகில் வைக்க வேண்டாம். ராக்கெட் போன்ற வெடிகளை திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக 101 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாணவர்களுக்கு அவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.காஞ்சிபுரம் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிலைய தீயணைப்பு அலுவலர்கள் பாஸ்கரன், அரசு, பார்த்திபன் ஆகியோர் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
WRITE A COMMENT