பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ரோபாவை உருவாக்கி அசத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசின் நான் மு்தல்வன் திட்டத்தின் திறன்மேம்பாட்டு மைய பொறுப்பாளரும் தாவரவியல் ஆசிரியருமான சிவக்குமார் கூறும்போது, "தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு மையம் வாரத்தில் நான்கு நாட்கள் செயல்படுகிறது. இதில், தையல்கலை, ரோபோடிக் மற்றும் கணினி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பாரதி மற்றும் ஆழியாறு அறக்கட்டளை ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளது.
மாணவிகள் தனித்திறனை வளர்க்க தையல் இயந்திரம், மடிக்கணினிகள், ரோபோடிக் வகுப்புகளுக்கான பொருட்கள் அறக்கட்டளை உதவியுடன் வாங்கப்பட்டது. இப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்த மையத்தில் மாணவிகளின் தனித்திறமையை வெளிக் கொண்டு வருவதற்காக ரோபோ இயங்குவதற்கான கணினி மொழியை (கோடிங்க்) கற்றுக் கொண்டு லைன் பாலோயிங் வடிவிலான ரோபாவை உருவாக்கியுள்ளனர்.
இது முன்னும், பின்னும், இடது, வலது என செல்லக்கூடிய வகையில் ரோபோவை வடிவமைத்துள்ளனர். சென்சார், மைக்ரோ கண்ட்ரோலரைப் பயன்படுத்தி இந்த ரோபோவை இயக்கலாம். ரோபோவை இயக்குவதற்கான கட்டளை மொழியை கணினியில் வடிவமைத்து உள்ளோம். கட்டளையின் 3-வது கட்டத்தை முடித்துள்ளோம். கணினியில் சி , போட்டோஷாப், கோரல்டிரா, ஜாவா போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தையல் பயிற்சியில் புது டிசைன்களில் ஆடை வடிவமைப்பு என்ற பாடத்திட்டத்தை தாண்டி தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. இது மாணவிகளின் மேற்படிப்புக்கு பெரிதும் உதவும்.
இவ்வாறு ஆர்வமுடன் தங்கள் தனிதிறன்களை மாணவிகள் வளர்த்து கொள்கின்றனர் என்று ஆசிரியர் சிவக்குமார் தெரிவித்தார்.
WRITE A COMMENT