மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சொந்த பணத்தில் அரசு பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்துள்ளார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். மானாமதுரை அருகே வெள்ளிக் குறிச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 6 வகுப்பறைக் கட்டிடங்கள் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் இருந்தன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருண்மொழி, பள் ளியைச் சீரமைக்க முடிவு செய்தார். முதற்கட்டமாக தனது சொந்தப் பணம் ரூ.50 ஆயிரத்தில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார்.இதை பார்த்த சக ஆசிரியர்களும்,கிராம மக்களும் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்தனர்.
மொத்தம் வசூலான ரூ.2 லட்சத்தில் பள்ளிக் கட்டிடங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன. மேலும் வண்ணம் பூசப்பட்டு பள்ளிச் சுவர்களில் பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியரின் இச்செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் அருண்மொழி கூறும்போது,"பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் 50-க்கும்மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள் ளோம். ஒவ்வொரு மரக்கன்றுக்கும் மாணவர்கள் பெயர் சூட்டி, அவர்கள் மூலம் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வருகிறோம். மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, போட்டிகளை நடத்தி ஊக்குவித்து வருகிறோம்" என்றார்.
WRITE A COMMENT