Published : 22 Sep 2022 06:52 AM
Last Updated : 22 Sep 2022 06:52 AM
நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் "சமூக அறிவியல் மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம்" ஆகிய மூன்று மன்றங்களின் தொடக்க விழா முப்பெரும் விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்மன்றங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆறாம் வகுப்பு மாணவி விஷ்ணு பிரியா இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பெயரையும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களையும் மனப்பாடமாக கூறி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார். ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாடகம் மற்றும் தொன்மை பாதுகாப்பு பற்றிய நாடகமும் நடத்தினர். ஆறாம் வகுப்பு மாணவர்கள் சூரிய குடும்பம் பற்றிய நாடகத்தை நடத்தினர். ஒவ்வொரு கோளும் குடும்பத்தலைவராம் சூரியனை வணங்கி தம்மை பற்றி சுய அறிமுகம் செய்து கொள்வது போல் இருந்தது அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
மேலும் புராதன சின்னங்கள், வரலாற்று ஆளுமைகள் மற்றும் வாக்காளர்களின் உரிமைகளும் கடமைகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் மாணவ மாணவிகள் உரையாற்றினர்.
கணித ஆசிரியர் சி.செல்வமுருகன், ஆங்கில ஆசிரியை செ.சத்தியப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக அறிவியல் ஆசிரியை தமிழ் இலக்கியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக, சமூக அறிவியல் ஆசிரியை சு.செல்வராணி வரவேற்றார். நிறைவாக, சமூக அறிவியல் ஆசிரியர் க.கலையரசன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT