Published : 10 Feb 2020 08:41 AM
Last Updated : 10 Feb 2020 08:41 AM

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளம் குறித்து மாணவர்களுக்கு கருத்தரங்கம்

ராமேஸ்வரம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுடன் உரையாற்றுகிறார் அந்நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி ஜெயக்குமார்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இது, மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் வாயிலாக கடந்த 1947-ம்ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி நிறுவப்பட்டது. கடந்த 1967-ம் ஆண்டு முதல் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆர்) கீழ் இயங்கி வருகிறது. இங்கு கடல் மீன் வளம் அதன் உற்பத்தி பெருக்கம், பாதுகாப்பு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு 73-வதுஆண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருவருகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள்தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த புதன்கிழமை கடல்வளம் சார்ந்த படிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே மன்னார் வளைகுடா மற்றும்பாக் ஜலசந்தி கடற்பகுதியில் உள்ள கடல்வளம், மீன்வளம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இந்த ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. இந்திய அளவில் கடல்வளம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆராய்ச்சி நிலையம் வரப்பிரசாதமாக திகழ்கிறது. இங்கு மீன்வளம் குறித்து மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராககலந்துகொண்ட மண்டபம் கடலோரகாவல்படை முதன்மை கமாண்டர் வெங்கடேஷ், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையில் சேருவதற்கான படிப்புகள் மற்றும் நுழைவுத் தேர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் மரைக்காயர் பட்டினம் கேந்திர வித்யாலயா பள்ளி, மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி, வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ராஜா மேல்நிலைப் பள்ளியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x