Published : 06 Jan 2020 08:39 AM
Last Updated : 06 Jan 2020 08:39 AM
தருமபுரி மாவட்டத்தில் முதல்முறை யாக தொப்பூர் அருகேயுள்ள உம்மியம்பட்டி அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அருகே உம்மியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அதிநவீன கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
‘சேர்க்கை இடங்கள் முழுமையாக நிரம்பி விட்டன’ என அறிவிப்பு பலகை வைக்கும் அளவுக்கு இந்த அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. சுற்று வட்டார பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படும் வகையில் இப்பள்ளியின் ஆசிரியர் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 கேமராக்கள்
இந்நிலையில், இப்பள்ளியில் தற்போது கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் 1 கேமரா, வளாகத்தை பதிவு செய்ய 1 கேமரா மற்றும் வகுப்பறைகளில் என மொத்தம் 8 கேமராக்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நரசிம்மனிடம் கேட்டபோது, ‘ரூ.32 ஆயிரம் செலவில் பள்ளி வளாகத்தில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளோம். கேமராவுக்கான செலவில் தொப்பூர் ஊராட்சி மன்றசெயலர் கோவிந்தன் என்பவர் ரூ.18 ஆயிரத்தை தன் பங்களிப்பாக வழங்கினார். எஞ்சிய தொகை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஐவிடிபி தொண்டு நிறுவனம் பங்களிப்பில் பெறப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் நேரடி அனுபவம்
பள்ளி பாதுகாப்புக்காகவும், வளாகத்தை கண்காணிக்கவும், மாணவர்களின் கற்றல் செயல்களை கண்காணித்து மேம்படுத்தவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்,கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் எங்கள் பள்ளி மாணவர்கள் தற்போது நேரடியான அனுபவத்தையும், அறிவையும் பெற்றிருப்பது கூடுதல் பலன்’ என்றார். தருமபுரி மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள முதல் அரசு பள்ளி உம்மியம்பட்டி அரசுப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT