Published : 05 Dec 2019 09:36 AM
Last Updated : 05 Dec 2019 09:36 AM
சின்மயா வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான அகில இந்திய கால்பந்து போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது.
கோவையில் உள்ள சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி சார்பில், நாடு முழுவதும் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான அகில இந்திய கால்பந்து போட்டி, கோவையில் தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு சின்மயா வித்யாலயா கல்வி மற்றும் நிர்வாக இயக்குநர் சாந்தி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி சதீஷ் வரவேற்றார். சென்னை சிட்டி கால்பந்து கிளப் துணை கேப்டன் கே.அஜித்குமார், இந்து தமிழ் மண்டல பொது மேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். வடவள்ளி சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 103 பேர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கால்பந்து போட்டியில் 34 மாணவர் மற்றும் மாணவியர் அணிகளைச் சேர்ந்த 450 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:திருபுணித்ரா சின்மயா வித்யாலயா பள்ளி அணி, கண்ணூர் சின்மயா வித்யாலயா பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. வடவள்ளி சின்மயா வித்யாலயா பள்ளி அணி, கோவை சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கண்ணமாலி சின்மயா வித்யாலயா பள்ளி அணி, வாழ்த்தகாடு சின்மயா வித்யாலயா பள்ளி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. கோட்டையூர் முத்தையா சி.வி. அழகப்பா பள்ளி அணி, புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தாராப்பூர் சின்மயா வித்யாலயா பள்ளி அணி, உன்சாஹார் சின்மயா வித்யாலயா பள்ளி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அண்ணா நகர் சின்மயா வித்யாலயா பள்ளி அணி, மகாராஷ்டிரா சின்மயா வித்யாலயா பள்ளி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் மாணவர் பிரிவில் கோவை வடவள்ளி, திரிபுணித்ரா, கீழ்ப்பாக்கம், கண்ணமாலி, தாராப்பூர், சென்னை விருகம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் சின்மயா வித்யாலயா பள்ளி அணிகளும், காரைக்குடி சின்மயா வித்யாலயா முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
மாணவியர் பிரிவில் சென்னை அண்ணாநகர், நாகைப்பட்டணம், வடவள்ளி, ஸ்ரீசிட்டி சின்மயா வித்யாலயா பள்ளிகளும் தகுதி பெற்றுள்ளன. போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT