தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல் பாடத்தை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் சோதனைகளை நேரடியாக செயல்முறை விளக்கம் மூலம் கற்பிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பரிக்ஷன்அறக்கட்டளை என்ற அமைப்பு மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் அறிவியல் பாடங்களை எளிதாக கற்றுக் கொடுக்கிறது. இதற்காக அனைத்து அறிவியல் உபகரணங்கள், ரசாயனங்கள், கருவிகள் கொண்ட ‘விஞ்ஞான ரதம்' என்ற வாகனத்தை அறக்கட்டளை வைத்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தை செயல்முறை மூலம் கற்பிக்க பரிக்ஷன் அறக்கட்டளைக்கு மாநகராட்சி ஆணையர் வி.பி.ஜெயசீலன் அழைப்புவிடுத்திருந்தார்.
அதன்பேரில் பரிக்ஷன் அறக்கட்டளை நிறுவனர் பசுபதி அறிவுரையின்படி, விஞ்ஞான ரதம் திட்ட இயக்குநர் வி.அறிவரசன் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் அறிவியல் பாடங்களை கற்பிக்கும் பணியை சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 500 மாணவ,மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக செயல்முறை விளக்கம் அளித்தார்.
மாணவ, மாணவிகள் அறிவியல் பாடங்களில் பல்வேறு கோட்பாடுகள், வினைகள், சோதனைகளைப் படிக்கின்றனர். இவற்றை அறிவரசன் நேரடி செயல்முறை மூலம் எடுத்துரைத்தார்.
தூத்துக்குடியில் வரும் 12-ம் தேதிவரை முகாமிட்டு மொத்தம் 17 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 3,000 மாணவ, மாணவிகளுக்கு நேரடி செயல்முறை விளக்கம் மூலம் அறிவியல் பாடத்தைக் கற்பிக்க உள்ளார்.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் வரும் சோதனைகளையும் நேரடியாகச் செய்து காட்டி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கிறார். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று அறிவியல் சோதனைகளை தெரிந்து கொள்கின்றனர்.
இது குறித்து சிவந்தாகுளம் மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியை ஐ.எமல்டா கூறுகையில், “இந்த நேரடிசெயல்முறை விளக்கம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அறிவியல் பாடத்தில் பல்வேறு சோதனைகளை செயல்முறை விளக்கம் மூலம், மாணவர்களையே அதில் ஈடுபடுத்தி காண்பிக்கும்போது எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
WRITE A COMMENT