ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி நாடார் மெட்ரிக் பள்ளி ஒட்டு மொத்தசாம்பியன் பட்டத்தை வென்றது.
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா போட்டி ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு யுனைடெட் யோகா சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளுக்கு ராமச்சந்திர ராஜா அறக்கட்டளைத் தலைவர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட யோகா சங்கத் தலைவர் அழகுமுருகன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ராஜா போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
பாலர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடந்தன. இதில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மெட்ரிக் பள்ளிகள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி நாடார் மெட்ரிக் பள்ளியும், நர்சரி பள்ளிகள் பிரிவில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் நர்சரி பள்ளியும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை யோகா சங்கச் செயலாளர் முத்துகுமார் செய்திருந்தார்.
WRITE A COMMENT