Published : 03 Dec 2019 09:45 AM
Last Updated : 03 Dec 2019 09:45 AM

அரசு பழங்குடியினர் பள்ளி அறிவியல் கண்காட்சியில் விண்ணில் ஏவப்பட்ட 2 சிறிய ரக ராக்கெட்கள்: மலைக் கிராம மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே எலந்த கோட்டப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் 2 சிறிய ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி அருகே எலந்த கோட்டப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மலைக் கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருவதால், அவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வரு கின்றனர்.

இந்நிலையில், இந்திய அரசியலமைப் புச் சட்ட தினத்தையொட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. மேலும், கும்பகோணத்திலிருந்து பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு, மாணவர்கள் முன்னிலையில் சிறிய ரக ராக்கெட்கள் ஏவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளியின் அருகே சுமார் 200 அடி உயரத்துக்கு செல்லும் வகையிலான 2 சிறிய ராக்கெட்கள் கொண்டு வரப்பட்டன.

மாணவ, மாணவிகள் உற்சாகம்

இதில் ஒன்று சாதாரணமாகவும், மற்றொன்று பாராசூட் பொருத்தப்பட்டு விண்ணில் உள்ள தட்பவெப்ப நிலைகளை அறிவதற்காக, செல்போன் செயலியுடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உரிய விளக்கங்கள் அளித்து விண்ணில் செலுத்தினர். இதனைக் கண்ட மாணவ, மாணவி கள் உற்சாகம் அடைந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும் போது, “மாணவ, மாணவிகள், இஸ்ரோவில் ஏவப்படும் ராக்கெட் களை தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு வந்தனர். இந்நிலையில் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், அறிவியலில் பல்வேறு படிநிலைகளை எட்டவேண்டும் என்ற மனநிலையை தூண்டுவதற்காகவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொறியி யல் கல்லூரி மாணவர்கள் மூலம் சிறிய ரக ராக்கெட்கள் விண்ணில் ஏவப்பட்டன” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x