புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வேங்கைவயல் அரசுத் தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா, மயில்சாமி அண்ணாதுரை துளிர் இல்லம் தொடக்க விழா மற்றும் துளிர் விநாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் 3-ம் இடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியை கோ.கலைச் செல்வி தலைமை வகித்தார். உணவுத் திருவிழாவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள் பா.கோமதி, அ.தனசேகர், ம.பத்மஸ்ரீ ஆகியோருக்கு காவேரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.வின்சென்ட் பரிசு வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் விநாடி-வினாபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அந்த இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் பரிசு வழங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெயரில் துளிர் இல்லம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வானியல் நிகழ்வு நிகழ்ச்சியில், சூரிய கண்ணாடிகளைக் கொண்டு சூரியனைஉற்று நோக்குதல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விழாவில் ஆசிரிய பயிற்றுநர் மலர்விழி மற்றும் வேங்கைவயல் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியை சி.ரேவதி வரவேற்றார். நிறைவாக, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ச.மலர்விழி நன்றி கூறினார்.
WRITE A COMMENT