கரூர்
சர்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்று திரும்பிய வெள்ளியணை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப் பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத் தாவில் நவ.5-ம் தேதி முதல் 8-ம்தேதி வரை இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்றது. பிரதமர்மோடி காணொலிக் காட்சி மூலம்விழாவை தொடங்கி வைத்து, மாணவர்களிடம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து உரையாற்றினார்.
விழாவில், இளம் விஞ்ஞானிகள் மாநாடு, விஞ்ஞானிகள் இலக்கியத் திருவிழா, வேளாண் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியலில் சிறந்து விளங்குவோருக்கான சந்திப்பு மற்றும் நேருக்கு நேர், அரசு சாரா அமைப்புகளின் கலந்தாய்வு உட்பட 28 நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த விழாவில், விஞ்ஞானிகள், விவசாயிகள், அறிவியலாளர்கள், பெண்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என 20,700 பேர் கலந்துகொண்டனர்.
இதில், தமிழகத்திலிருந்து கரூர் மக்களவைத் தொகுதி சார்பாக வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கோ.சுகந்த், கா.பசுபதி, மு.விஷ்ணு, சு.சுகி, சி.நவீன்குமார் ஆகிய 5 மாணவர்கள், தங்களது வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபாலுவுடன் கலந்து கொண்டனர்.
இவர்கள், காவிரியிலிருந்து கடலில்கலக்கும் உபரி நீரை குழாய் மூலம்வெள்ளியணை குளத்துக்கு கொண்டுவரும் ஆய்வுத்திட்டத்தை சமர்ப்பித்து, பாராட்டுச் சான்று பெற்றனர்.
விழாவில் பங்கேற்று பாராட்டுச் சான்று பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் கு.முத்துசாமி தலைமையில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளிமுன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஆ.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கரூர் மாவட்டம் கூடைப்பந்து கழகத் தலைவர் த.த.கார்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெ.தனபாலுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மு.அமிர்தலிங்கம், ஆடிட்டர்ல.ரவிச்சந்திரன். ர.ஜோதிமணி, மதுரகவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
WRITE A COMMENT