விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம ஜெயம்- பிரியா தம்பதியரின் மகள் ஸ்ரீ சாரதா தேவி. இவர் விழுப்புரம் அருகேயுள்ள பனங்குப்பம் ஜான் டூயி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவரது தந்தை ஸ்ரீராமஜெயம், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராகவும், தாய் பிரியா விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பரதநாட்டிய ஆசிரியையாகவும் பணியாற்றிவருகிறார்கள்.
இந்த இசை தம்பதியரின் மகளான ஸ்ரீ சாரதா தேவி தொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து சாதனை படைத்திருக்கிறார். மகளின் சாதனை குறித்து பெற்றோர் கூறியதாவது:எங்கள் குடும்பம் பாட்டு, பரதம்என இசை பாரம்பரியம் கொண்டகுடும்பம் ஆகும். என் மகளின் தாத்தாவாக்கூர் வி.ஏ. வைத்தியநாதன் மிக சிறந்த நாதஸ்வர வித்வான் ஆவார்.
அவர் எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் அயல்நாடுகள் சென்று நிகழ்ச்சிகள் வழங்கும் சிறந்த கலைஞர் ஆவார். இவையே ஸ்ரீசாரதாதேவி வீணை கற்க அடித்தளமாக அமைந்தது.
7 வயதில் பாட்டு, வீணை வாசிக்கபழகினார். பின்பு வீணையின் நுணுக்கங்களை கற்க புதுச்சேரி வானொலி நிலைய வித்வான் பானுமதியிடம் 3 மாதம் வீணை பயிற்சி பெற்றார். தொடர்ந்து செல்ல முடியாத காரணத்தால் தமது தாத்தாவிடமே நாதஸ்வரத்தை வாசிக்க சொல்லி அதை அப்படியே வீணையில் வாசிக்க பழகிக் கொண்டார்.
சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து வீணையின் தந்தியை அழுத்தி வாசித்தால் கையில் கொப்புளம் ஏற்பட்டு ரத்தம் வரக் கூடும். இத்தகைய வீணை வாத்தியத்தில் ஒரு சாதனை படைக்க வேண்டும் என்று தொடர்ந்து கடுமையாக பயிற்சி செய்து 5 மணி நேரம் வாசிக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.
இந்த வீணை நிகழ்ச்சியை சமுதாய விழிப்புணர்வுக்காக செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அதன்படி, கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘‘குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு” விழிப்புணர்வு ஏற்படுத்துதல் முன்னிட்டு ஸ்ரீசாரதா தேவி விழுப்புரத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனை ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், எக்ஸலென்ஸி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட்ஸ், விகிரிஷா புக் ஆப் வேல்டு ரெக்ரார்ட்ஸ் ஆகிய 3 புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவி ஸ்ரீ சாரதாதேவி கூறும்போது, எனது லட்சியம் 8 மணி நேரம் தொடர்ந்து வீணை வாசித்து கின்னஸ் புத்தகத்திலும் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதுதான்.
இசைக் கருவியின் ராணி என்று போற்றப்படும் வீணை இசைக்கருவி தமிழின் சிறப்புமிக்க தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தேவாரம் போன்ற எண்ணற்ற நூல்களில் போற்றப்படும் இந்த (யாழ்) இசையை மேலும் நுணுக்கமாக கற்று புதுப்பாணியில் சிறந்த இசை கலைஞராக வேண்டும். இதன் மூலம் தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அரங்கில் இதனை எடுத்து செல்வதே எனது லட்சியம் ” என்றார்.
WRITE A COMMENT